பிரிட்டனில் தெரீசா மே ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: நாடாளுமன்றத்தில் விவாதம்

தெரீசா மே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெரீசா மே.

பிரிட்டனில் பிரதமர் தெரீசா மே முன்வைத்த பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்த நிலையில், அரசாங்கத்தின் மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடந்து வருகிறது.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் பொதுத் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியறுத்திப் பேசுகிறார்.

கடந்த நான்காண்டுகளில் 2 பொதுத் தேர்தல்கள் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடந்துள்ளது. ஸ்காட்லாந்தில் ஐக்கியராஜ்ஜியம் முழுமைக்குமான 2 தேர்தல்கள், ஒரு ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு கருத்து வாக்கெடுப்புகள் ஐந்தாண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சிக்கலின் தீவிரம், புதிதாக மக்களின் ஆதரவு பெற்ற அரசு ஒன்றினைக் கோருகிறது என்று கோர்பின் பேசினார்.

இதனிடையே மார்ச் 29-ம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டிய நிலையில், ஒப்பந்தம் ஒன்றும் இல்லாமலே வெளியேறுவதன் விளைவுகள் குறித்து பெரும்பாலோர் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், சிலர் அதை வரவேற்கின்றனர்.

ஒப்பந்தம் ஏதுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நிலை தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் இது வட அயர்லாந்து அமைதி ஒப்பந்தத்தை பாதிக்கும் என்று ஐரிஷ் பிரதமர் லியோ வரத்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மே, ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பை மறுக்கவில்லை. பிரிக்ஸிட் திட்டமே தாமதப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தெரீசா மே அரசு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வாக்கெடுப்பு கிரீன்விச் நேரப்படி இரவு 7 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 12.30க்கும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் 14 நாள்களுக்குள் இதே அரசாங்கமோ, அல்லது மாற்று அரசாங்கமோ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறத் தவறினால் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

இந்த தடைகளைத் தாண்டும் நிலையில், தெரீசா மே ஆட்சியின் பதவிக் காலம் 2022 வரை உள்ளது. எனினும், அடுத்த பொதுத் தேர்தலை தமது கன்சர்வேடிவ் கட்சி தமது தலைமையில் சந்திக்காது என்று தெரீசா மே ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :