102 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்துள்ள முதல் உலகப் போர் கப்பல்

German WW1 submarine

பட மூலாதாரம், AFP

கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்த முதல் உலகப்போரில் பயன்படுத்தபட்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றின் சிதிலமடைந்த எச்சம் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இக்கப்பல் ஜெர்மனிக்கு சொந்தமானது.

பிரான்சில் உள்ள வீசா கடற்கரை பகுதி அருகே UC-61 என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல், 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம், தரை தட்டியதால் ஈர மணலில் சிக்கிக்கொண்டது.

அதை நகர்த்த முடியாமல் போனதால், அந்தக் கப்பலின் குழுவினர் அதை அங்கேயே விட்டுச்சென்றனர்.

1930ஆம் ஆண்டுவாக்கில் அந்தக்கப்பலின் பெரும்பாலான பகுதிகள் மணலால் மூடப்பட்டன.

கடற்கரையின் அருகே கடலுக்குள் உள்ள மணல் மேட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அலைகளின் வலு குறைந்துள்ளதால், மணல் அரிக்கப்பட்டுள்ளது.

அதனால் டிசம்பர் மாதம் முதல் அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

"அலைகள் மற்றும் காற்றின் வேகத்தைப் பொருத்து, ஒவ்வொரு இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை அந்தச் சிதிலமடைந்த கப்பல் வெளியே தெரியும். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, அது மீண்டும் மணலால் மூடப்படும்," என்று வீசா பெர்னார்டு பிராக் நகரின் மேயர் கூறியுள்ளார்.

World War One German

பட மூலாதாரம், AFP

"அந்த நகரில் வசிக்கும் மக்களுக்கு, அங்கே ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மணலால் மூடப்பட்டுள்ளது என்பது தெரியும். எனினும், அதன் மேற்பரப்பை இவ்வளவு அதிக அளவில் பார்ப்பது இதுவே முதல் முறை," என உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி வின்சென்ட் ஸ்கிமிட் கூறுகிறார்.

இந்தப் பகுதி இப்போது, மீண்டும் ஒரு சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளது.

இந்தக் கப்பலின் வரலாறு என்ன?

UC-61 கப்பல் முதல் உலகப்போர் சமயத்தில் 11 கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் தனது கடைசிப் பயணத்திபோது, கடலுக்கடியில் கண்ணி வெடிகளை வைக்க பெல்ஜியம் நாட்டிலுள்ள சேப்ரோகா கடற்கரை கிராமத்தில் இருந்து, வடக்கு பிரான்ஸ் பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தது.

கப்பல் தரை தட்டியதால் அதிலிருந்த 26 ஊழியர்களும், அப்போது பிரெஞ்சு அரசிடம் சரணடைந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: