You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் - எல்லையை பார்வையிட சென்ற டிரம்ப்
மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை எனில் அவசர நிலைபிரகடனம் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
"அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என எல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மெக்சிகோ மறைமுகமாக இதற்கான செலவை ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதியளவு முடங்கியுள்ளது. இதனால், சுமார் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் பெறாமல் உள்ளனர்.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர்கள் நிதிக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில் சட்டத்துக்கு கையெழுத்திட்டு, அரசாங்க செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடியாது என்று அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார்.
ஆனால் இதற்கு நிதி வழங்க ஜனநாயக கட்சியினர் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் முறிந்துபோனது.
காங்கிரஸ் ஒத்துழைப்பு இல்லாமல் ட்ரம்பால் சுவர் கட்ட முடியுமா?
டெக்ஸாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள மெக்கலென் எல்லை ரோந்து நிலையத்தை வியாழக்கிழமையன்று அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.
சுவருக்கான நிதி வழங்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவசர நிலையை நிச்சயம் பிரகடனப்படுத்துவேன் என்று அவர் கூறினார்.
போர் அல்லது தேசிய அவசரம் ஏதேனும் ஏற்பட்டால், அதிபராக இருப்பவர்கள் ராணுவ திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது நீதிமன்றத்தில் எதிர்க்கப்படும் என்றும் அரசியலமைப்பு நடைமுறைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மற்ற விஷயங்களுக்காக காங்கிரஸ் ஒதுக்கிய நிதியில் இருந்தும் இதற்கான பணம் வரவேண்டும் என்பதால் சில குடியரசுக்கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அதிபர் டிரம்பிற்கு ஆதரவான குடியரசு கட்சியின் செனட்டர் லின்ட்சே கிரஹாம் கூறுகையில், "எல்லை சுவர் கட்டுவதற்கு நிதி ஒப்புதல் பெற, டிரம்ப் தனது அவசர நிலைக்கான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்தினால் அது "தவறு," என்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து வெளிவர இதுவே தீர்வு என்பது மாதிரி ஆகிவிடும் என்றும், ஜனநாயக கட்சியின் செனட்டர் ஜோ மன்சின் கூறியுள்ளார்.
டிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தாம் அதிபரானால் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையே எல்லைச்சுவர் கட்டப்படும் எனத் தெரிவித்திருந்தார். எஃகு தடுப்பு சுவர் கட்டுவதற்காக சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் தொகை கேட்கிறார் அதிபர் டிரம்ப். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜனநாயக கட்சியின் நிதி ஒதுக்க மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மெக்கெலன் நிலையத்தில் இருந்து பேசிய அதிபர் டிரம்ப், "எல்லையில் தடுப்பு இல்லையென்றால், இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது" என்று கூறினார். சுவர் இல்லாமல் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்