You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் கும்பல் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் - நூற்றாண்டு போராட்டம் வெற்றி
கும்பல் கொலைகளை தனி குற்றமாக்கும் சட்டம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.
ஒவ்வொரு மாகாணமும் தனித்தனியாக சட்டம் இயற்றிக்கொள்ளும் அதிகாரம் கொண்டுள்ள அமெரிக்காவில், இந்த மத்தியச் சட்டம் நாடு முழுமைக்கும் செல்லுபடியாகும்.
ஜூன் மாதம் கறுப்பினத்தைச் சேர்ந்த மூன்று செனட் உறுப்பினர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, குமபல் கொலை இனிமேல் கொலைக் குற்றமாக மட்டுமல்லாது, வெறுப்புணர்வால் செய்யப்படும் குற்றமாகவும் பதிவு செய்யப்படும்.
அமெரிக்க வரலாற்றில், இது வரை பெரும்பாலான கும்பல் கொலைகளுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டதில்லை.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசில்,1918 முதல் இதுவரை கும்பல் கொலைகளை குற்றமாக்கும் சட்ட மசோதாக்கள், 200க்கும் மேலான முறை முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டன.
சட்டத்துக்குப் புறம்பாக பல நபர்கள் ஒன்று கூடி கொலை செய்வது கும்பல் கொலை எனப்படும். அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில், 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த மசோதாவை முன்மொழிந்தவர்களில் ஒருவரான செனட் உறுப்பினர் கமலா ஹேரிஸ், இந்த வாக்கெடுப்பு ஒரு வரலாறு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சட்ட மசோதா எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கமலா ஹேரிஸ் மற்றும் கோரி புக்கர் மற்றும் ஆளும் குடியரசுக் கட்சியின் டிம் ஸ்காட் ஆகிய செனட் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.
இதுவரை இறந்தவர்கள் எத்தனைபேர்?
1882 முதல் 1968 வரை அமெரிக்காவில் 4,742 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொலைகளில் ஈடுபட்டவர்களில் 99% பேர் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாகவும், இனவெறியைக் காட்டுவதற்கான உச்சபட்ச வழிமுறையாக கும்பல் கொலைகள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
"ஒரு தவறை நான் இன்று சரி செய்துள்ளோம். நம் நாட்டின் வரலாற்றில் கறை படிந்திருந்ததை நாம் ஒப்புக்கொண்டுள்ளோம், " என்று புதன்கிழமை நடந்த வாக்கெடுப்புக்குப் பின் மசோதாவை முன்மொழிந்தவர்களில் ஒருவரான புக்கர் கூறியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவை. ஆனால், செனட் உறுப்பினர்கள் 100 பேரும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் வரலாறு என்ன?
கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்ட மசோதா 100 ஆண்டுகளுக்கு முன்னர், மிசோரியைச் சேர்ந்த குடியரசு கட்சியின் லியோனிதாஸ் டையர் என்பவரால் காங்கிரசில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா காங்கிரசில் நிறைவேற்றப்பட்டாலும், கறுப்பினத் தொழிலாளர்களை அதிகமாக அடிமை வர்த்தகம் செய்த தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பால் செனட் சபையில் நிறைவேறாமல் போனது.
கும்பல் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றாமல் இருப்பதற்கு மன்னிப்புக் கோரி 2005இல் செனட் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதற்கு மொத்தமுள்ள 100 உறுப்பினர்களில் இரு கட்சிகளையும் சேர்ந்த 90 பேர் ஆதரவளித்திருந்தனர்.
கும்பல் கொலைகளால் இறந்தவர்களுக்கான நினைவகம் ஒன்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலபாமாவில் திறக்கப்பட்டது என நியூ யார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
- வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: பணத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
- எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா?
- ‘சீதக்காதி’- ஏன் இந்த தலைப்பு? -மனம் திறக்கும் பாலாஜி தரணிதரன்
- தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயற்சித்த நடிகர் விஷால் கைது
- ரணில் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்