You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம்களுக்கு எதிராகவும், சாதிய ஆதிக்க நடைமுறைகளை மீறியதாக தலித்துகளுக்கு எதிராகவும், வகுப்புவாதப் புரளிகளாலும் இந்தியாவில் கும்பல் கொலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இதைப்போலவே, கருப்பினத்தவருக்கு எதிரான வெறுப்பால் பல கொலைகள் அமெரிக்காவில் நடந்துள்ளன. 19ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும் தெற்கு ஐக்கிய அமெரிக்க பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் வெள்ளையின கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
இப்படி கும்பல் கூடி கொலை செய்வதை வெறுப்பு சார்ந்த குற்றமாக வரையறை செய்யும் வகையில் அமெரிக்காவில் ஒரு புதிய சட்ட முன்வடிவை மூன்று கருப்பின செனட்டர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த சட்டமுன்வடிவு சட்டமாக ஏற்கப்பட்டால் கும்பல்கூடி கொல்வது ஒரு கொலைக் குற்றமாக மட்டுமில்லாமல் வெறுப்பை வளர்க்கும் ஒரு குற்றமாகவும் ஆக்கப்படும்.
இந்த கும்பல் கொலைகளுக்கு எதிராக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான முன்வடிவுகள் 1918 முதல் 200க்கும் மேற்பட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முறையும் அவை தோற்கடிக்கப்பட்டன என்கிறார் தற்போது இந்த மசோதாவை முன்மொழியும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ்.
"கும்பல் கொலைகள் நமது வரலாற்றின் இருண்ட, வெறுக்கத்தக்க பகுதி. மீண்டும் இதனை செய்யாமலிருக்க இதனை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்," என்றார் அவர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "கும்பல் கொலைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதிச் சட்ட" முன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், இந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.
முறையான விசாரணையோ, சட்ட விதிகளோ இன்றி ஒரு கும்பல் கொலை செய்வதே 'கும்பல் கொலை (Lynching)' என்று அழைக்கப்படுகிறது.
'கறைபடிந்த கடந்த காலம்'
இந்த மசோதாவை முன்னெடுக்கும் கமலா ஹாரிஸ், புக்கர் இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். டிம் ஸ்காட் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தபோதும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது கேலிக்கூத்து என்று வருணித்தார் புக்கர்.
"நமது வரலாற்றின் கறைபடிந்த கடந்த காலத்தைப் பற்றி ஒப்புக் கொண்டு, இந்த வெட்கக்கேடான நடைமுறையை ஒழிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை சட்டவடிவமாக்குவதன் மூலம் வரலாற்றின் தவறுகளை இந்த மசோதா சரி செய்யும்" என்றும் அவர் கூறினார்.
1882க்கும் 1968க்கும் இடைப்பட்ட காலத்தில் 4,742 பேர் இத்தகைய கும்பல் கொலைகளால் உயிரிழந்ததாகவும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் தண்டனையில் இருந்து தப்பியதாகவும் இந்த மசோதா வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு 60 செனட்டர்களின் ஆதரவு தேவை என்றும் இதுவரை 16 பேர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் முறையாக கும்பல் கொலைகளுக்கு எதிரான மசோதா 100 ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சி உறுப்பினர் லியோனிடாஸ் டயர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது சட்டமாகவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்