You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தை கடத்தல் கும்பலைத் தேடி கொலை வெறியுடன் ஆவேசமாக வந்த கும்பல்
- எழுதியவர், ரவி பிரகாஷ்,
- பதவி, பிபிசி ஹிந்தி
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூரில் உள்ள ஷோபாபூரில், கடந்த மே 18-ஆம் தேதியன்று மற்ற நாட்களைப் போல சாதாரணமாகவே காலைப் பொழுதுஅமைந்தது.
மக்கள் தங்களின் அன்றாட கடமைகளை பார்ப்பதில் மும்முரமாக இருந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியில் பெண்கள் ஆழ்ந்திருந்தனர்.
அன்று நடந்த சம்பவங்கள் குறித்து அந்த ஊரை சேர்ந்த ஆபிதா கூறுகையில், ''நான் காலை நமாஸ் ( தொழுகை) பண்ணிக் கொண்டிருந்த போது பெருங் குரல்கள் வெளியே ஒலித்தன. சுமார் 1000 பேர் அளவில் பெருங் கூட்டம் திரண்டிருந்தது'' என்று தெரிவித்தார்.
''அவர்கள் ஒரு புயல் போல ஆவேசத்துடன் காணப்பட்டனர். அவர்கள் கடும் வார்த்தைகளை பிரயோகம் செய்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் ஓடி ஒளிந்தனர்'' என்று ஆபிதா கூறினார்.
இது குறித்து ஆபிதா மேலும் பிபிசியிடம் கூறுகையில், '' அவர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர். குழந்தை திருடன் பதுங்கியிருப்பதாக குற்றம்சாட்டி வீடுகளுக்கு தீ வைப்பதாக கூறினர். எங்கள் குழந்தைகளை கீழே தள்ளிவிட்டு வீட்டு உடமைகளை தீ வைத்தனர்'' என்று நடந்த சம்வங்களை ஆபிதா விவரித்தார்.
''அந்த நாள் மிகவும் அச்சுறுத்துவதாக அமைந்தது. எங்கள் வாழ்க்கையில் இது போன்ற ஒரு மோசமான நாளை மீண்டும் இறைவன் தரமாட்டார் என்று நம்புகிறோம்'' என்று ஆபிதா குறிப்பிட்டர்.
குழந்தை திருடர்களை தேடி, கடந்த மே 18-ஆம் தேதியன்று ஆபிதா வசிக்கும் ஷோபாபூர் கிராமத்துக்கு, மூன்று அருகாமை கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு பேரை அடித்துக் கொண்ட கூட்டம்
வெறிகொண்ட இக்கூட்டம் ஷோபாபூர் கிராமத்தை சூறையாடி, நான்கு பேரை அடித்துக் கொன்றனர். ஒருவரைக் கொன்று, அவரது முகத்தையும் தீயினால் எரித்துள்ளது.
''இந்தப் பகுதிகளில் குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று மிகவும் தீவிரமாக இயங்கி வருவதாக பரவும் வதந்திகள் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது,''என்று பிபிசி ஹிந்தியிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த ஷோபாபூர் கிராமத்தில் ஏறக்குறைய 80 வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளாகும்.
கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அருகாமை கிராமங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
ஷோபாபூர் கிராமத்தில் உள்ள முர்டூஜா அன்சாரியின் வீட்டுக்குதான் ஆவேசம் கொண்ட இந்த கும்பல் முதலில் சென்றது. ஒரு இரும்பு தடியால் இக்கூட்டத்தால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஷோபாபூரில் உள்ள பல வீடுகளின் உடைமைகளும் தீக்கரையாக்கப்பட்டுள்ளது அல்லது சூறையாடப்பட்டுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமையன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் தொடர்பாக வதந்திகள் நிலவி வருவதையடுத்து 6 பேரை மக்கள் கூட்டம் ஒன்று கொன்றுள்ளது.
மாநில காவல்துறையை சேர்ந்த பேச்சாளர் ஆர்கே மாலிக், கடத்தல் கும்பல் குறித்து பொதுமக்கள் பெருமளவில் கவலைப்பட ஆரம்பித்தனர் என்று கூறியுள்ளார்.
''அவர்களுக்கு அடையாளம் தெரியாத யாரையும் குழந்தை கடத்துபவர்கள் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்'' என்றார் அவர்.
செராய்கெலாவில் கும்பலை தடுத்து நிறுத்த முயற்சித்த காவலர்கள் காயமடைந்திருப்பதாக மாலிக் மேலும் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்