வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: பணத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அன்றாடம் புழக்கத்திற்குத் தேவைப்படும் பணத்தை சிக்கல் இல்லாமல் பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன?

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், டிசம்பர் 21 முதல் 26 வரை, இடையில் ஒரு நாள் தவிர 5 நாட்கள் இந்திய வங்கிகள் செயல்படப் போவதில்லை.

டிசம்பர் 21ம் தேதி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. டிசம்பர் 22ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படாது. 24ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும்.

25ம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால் பொது விடுமுறை. 26ம் யு.எஃப்.பி.யு. கூட்டமைப்பு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.

எனவே இந்த 6 நாட்களில் திங்கள்கிழமை தவிர 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

இவ்வாறு வங்கிகள் தொடர்ந்து இயங்காமல் இருக்கும்போது, மக்கள் பல்வேறு விதங்களில் அல்லல்படுகின்றனர்.

இந்த கஷ்டங்களை களைய என்ன செய்ய வேண்டும்? வங்கிகளுக்கு செல்லாமல் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இருக்கும் மாற்று வழிகள் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளும் வசதி இப்போது உள்ளது.

ஆனால், தொடர்ந்து வங்கிகள் செயல்படாமல் இருக்கும் பட்சத்தில், ஏடிஎம்களிலும் பண தட்டுப்பாடு ஏற்படலாம்.

எனவே பணமில்லா பரிமாற்றங்களே சிறந்த தேர்வாக அமையும்.

இன்டர்நெட் பேங்கிங்

வங்கிக்கு செல்லாமலேயே இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலம் நாம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

இந்தப் பணமில்லா பரிமாற்ற வசதி 24 மணிநேரமும் செயல்படுகிறது.

இ-வாலட்

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு செல்பேசி வாலட் ஆப்-கள் (செயலிகள்) இப்போது உள்ளன.

இத்தகைய சில ஆப்-களில் பணப் பரிமாற்ற வசதிகளும் கிடைக்கின்றன.

யுபிஐ (Unified Payments Interface)

உடனடியாக பணப்பரிமாற்றம் செய்வதற்கான தளம் இதுவாகும்.

வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு வசதிகளை வழங்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்பேசி மூலம் பணத்தை பரிமாறிக்கொள்ள இது உதவும். இந்திய ரிசர்வ் வங்கியால் இது ஒழுங்குபடுத்தப்படுகிறது.

பணத்தை வங்கிக்கணக்கில் போடுதல்

பணத்தை எடுத்து செலவழிப்பது மட்டுமல்ல. பணத்தை வங்கிக் கணக்கில் போடுவதற்கு இந்த நாட்களில் வசதிகள் உள்ளன.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் இ-பிராஞ்ச் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் ஒரு வசதிதான் CDM எனப்படும் ரொக்க டெபாசிட் இயந்திரங்கள்.

24 மணிநேரம் வேலைசெய்யும் இந்த வசதியை பணத்தை வங்கிக்கணக்கில் போடுவதற்குப் பயன்படுத்தலாம்.

பணம் அனுப்பும் வசதி

பணத்தை எந்தவொரு வங்கி கணக்கிற்கும் ஆன்லைன் வங்கி சேவையில் உள்ள IMPS மூலம் உடனடியாக அனுப்ப முடியும்.

இந்த வசதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் எல்லா விடுமுறை நாட்களிலும் 24 மணிநேரமும் உள்ளது.

தபால் நிலையம்

இந்தியாவின் தபால் நிலையங்களிலும் வங்கி சேவைகள் உள்ளன.

எனவே, வங்கிகள் செயல்படாத இந்த நாட்களில் தபால் நிலையங்களின் வங்கி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

செயலிகள் மூலம் பணம் செலுத்துவது பாதுகாப்பானதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: