அமெரிக்காவிலும், நெதர்லாந்திலும் 'ராமர் உருவம் பொறித்த பணம்' புழங்குகிறதா?

ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், போலிச் செய்திகள் பரப்புவதும் சூடு பிடித்துள்ளது.

அரைகுறைத் தகவல்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வாட்ஸ்-அப், பேஸ்புக், டிவிட்டர் என சமூக ஊடகங்கள் பலவற்றில் சில தகவல்கள் பகிரப்படுவது, அது பலரால் பகிரப்படுவதையும் காண முடிகிறது.

ராமர் உருவம் பொறித்த நாணயங்கள் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுவதும் அதில் ஒன்றுதான். அந்த பதிவுகளுடன் ராமரின் உருவம் இடம்பெற்றுள்ள பணத்தாள்களும், நாணயங்களும் உள்ள புகைப்படங்களும் பகிரப்படுகின்றன.

சிலர் மேலும் சற்று கூடுதலாக அதைப் பற்றிய விரிவான தகவல்களையும் இணைத்து எழுதுகின்றனர். 18 மொழிகளில் ராமரின் பெயர் இடம் பெற்றுள்ளது, ராமரின் உருவம் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது, இந்த பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் மதிப்பு, யூரோ, டாலர் போன்ற நாணயங்களின் மதிப்பை விட அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'ராஜஸ்தான் பத்திரிகா' மற்றும் 'தைனிக் ஜாக்ரண்' போன்ற பத்திரிகைகளும் ராமர் நாணயம் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன.

10 யூரோக்களுக்கு நிகரானது ராமரின் உருவம் பதித்த ஒரு பணத்தாள் என்றும் செய்திகள் உலவுகின்றன.

ஆனால் பிபிசி மேற்கொண்ட போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளில், ராமர் நாணயத் தகவலும் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளின் மத்திய வங்கிகள் இவற்றை அதிகாரபூர்வ பணமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது.

ராமர் நாணயம் உண்மையா?

அண்மையில் ராமர் ஆலயம் கட்டுவது தொடர்பாக அயோத்தியில் நடத்தப்பட்ட மாநாட்டின்போதும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என்பதை பிபிசி உண்மை அறியும் குழு கண்டறிந்தது.

அதேபோல், தற்போது ராமர் நாணயம் தொடர்பான தகவல்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

@SpokenTwilight என்ற பெயரில் டிவிட்டரில் இயங்குகிறவர் தன்னிடம் உள்ள ராமர் முத்திரை பதித்த பணம் அமெரிக்காவின் பல நகரங்களிலும், சிற்றூர்களிலும் செல்லத்தக்கது என்று ஒரு பதிவிட்டுள்ளார்.

@SpokenTwilight என்ற டிவிட்டர் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் 'அமெரிக்க ஹிந்து நவ்சேத்னா' அமைப்புடன் தொடர்புடைய வலைதள பக்கத்தில் காணப்படுகிறது, இது 2018 பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது.

'ராமர் நாணயம்' என்றால் என்ன?

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள 'மகரிஷி வேதிக் சிட்டி' என்ற நகரில், 'த குலோபல் கண்ட்ரி ஆஃப் வோர்ல்ட் பீஸ்' என்ற அமைப்பு 2002ஆம் ஆண்டு இந்த பணத்தாளை உருவாக்கியதை எங்கள் ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

இந்த நிறுவனம், அதே ஆண்டில் நெதர்லாந்திலும் ராம் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. மகரிஷி மஹேஷ் யோகி (மஹேஷ் பிரசாத் வர்மா) என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டு மகரிஷி மஹேஷ் யோகி இறந்தபிறகு, இந்த நாணயத்தின் நிலைமை என்னவானது என்ற தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் இந்த குறிப்பிட்ட நாணயம், வேதிக் சிட்டியின் முக்கியமான பொருட்களின் பட்டியலில் இன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "2002, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இந்த நாணய விநியோகம் தொடங்கியது. நகரத்தின் பொருளாதார அபிவிருத்திக்காகவும், உள்ளூர் வணிக மேம்பாட்டுக்காகவும் சிட்டி கவுன்சில், ராமர் நாணயத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது."

"பணத்தாளில் 'ஒரு ராமர் நாணயம்' என்பது 10 அமெரிக்க டாலர் மதிப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 10 அமெரிக்க டாலர் கொடுத்து, யார் வேண்டுமானாலும் ராமர் நாணயத்தை வாங்கலாம். ஒன்று, ஐந்து, பத்து என்ற நாணய மதிப்பில் ராமர் பணத் தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன."

அதாவது, இந்த ராமர் நாணயம், ஆசிரமத்திற்குள் மட்டுமே பயன்படுத்தப்படும், அல்லது அந்த குறிப்பிட்ட ஆசிரமத்துடன் தொடர்புடைய நிறுவன்ங்களில் செல்லுபடியாகக்கூடியது.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணிபுரியும் பங்கஜ் ஜெயின் என்பவர் கடந்த ஆண்டு இட்டுள்ள ஒரு பதிவில், அமெரிக்காவில் இருக்கும் "மகரிஷி வேதிக் சிட்டி" அமைப்பு, வேத முறையிலான விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வியுடன் ராமர் நாணயத்தையும் அறிமுகப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமர் நாணய பத்திரங்கள்

ஒரு காலகட்டத்தில் மகரிஷி மஹேஷ் யோகியின் சீடர்களின் எண்ணிக்கை 60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த்து.

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'தி பீட்டில்ஸ்' இசைக்குழுவினர் மஹேஷ் யோகியின் சீடர்களாக இருந்தனர்.

பிபிசி ஆங்கிலச் சேவையில் 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியின்படி நெதர்லாந்தின் சுமார் 100 கடைகள், 30 கிராமங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் சில இடங்களில் ராமர் நாணயம் புழக்கத்தில் இருந்தது.

அந்த காலகட்டத்தில் டச்சு மத்திய வங்கி, ராமர் நாணயத்தை கண்காணித்து வருவதாக கூறியிருந்தது.

அந்த அமைப்பின் நெருங்கிய வட்டாரங்களில் மட்டுமே இந்த நாணயம் புழக்கத்தில் இருக்கும் என்றும், இதில் சட்டமீறல்கள் எதுவும் நடைபெறாது என்றும் டச்சு மத்திய வங்கி நம்பியது.

நெதர்லாந்து அரசு வங்கியின் கணிப்பின்படி, 2002ஆம் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் ராமர் நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம்.

ஆனால், ராமர் நாணயம் ஒருபோதும், அதிகாரபூர்வ நாணயமாக அங்கீகரிக்கப்படவில்லை. அரசின் பார்வையில் அது ஒரு காகிதம் மட்டுமே. ஆனால் ஆசிரமமானது அதற்கு ஒரு மதிப்பை நிர்ணயித்து, ஒரு குறிப்பிட்ட மதிப்பை (அரசின் அதிகாரபூர்வ நாணயத்திற்கு நிகரான மதிப்பை) நிர்ணயித்து, கூலியாகவும், பொருட்களை பரிமாறிக் கொள்ளவும் பயன்படுத்தியது.

'ராமர் நாணயம் வெளிநாட்டில் இருந்தால், இந்தியாவில் ஏன் இல்லை?'

குஜராத்தின் சனாதன் பிரிவு அறக்கட்டளையின் தேசியத் தலைவர் உமேத் சிங் சாவ்டா என்பவர் டிவிட்டரில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: "நெதர்லாந்திலும், அமெரிக்காவிலும் பயன்படுத்தப்படும் ராமர் நாணயத்தின் மதிப்பு 10 யூரோக்களுக்கு நிகரானது."

இத்துடன் அவர் முக்கியமான ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தனது பதிவில் இணைத்துள்ள அவர், "வெளிநாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராமர் நாணயம், இந்தியாவில் ஏன் பயன்படுத்தப்படுவது இல்லை?" என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

சில சமூக ஊடகப் பதிவுகளும் ராமர் நாணயம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று கோருகின்றனர்.

ராமர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்கும் இந்து அமைப்புகள் தற்போது, 'ராமர் நாணயம்' என்ற விஷயத்தையும் ஆதரிக்கின்றன.

நாணயத்தின் தற்போதைய நிலைமையைப் பற்றி கேள்வி எழுப்பும் சிலர், இந்தியா ஏன் காந்தியை மட்டுமே நாணயங்களில் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

பிற நாடுகளைப் போன்றே இந்தியாவும் பலருடைய புகைப்படங்களை நாணயங்களில் அச்சிடவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் 'இந்து நாணயங்கள்'

'ராமர் நாணயம்' பற்றி மட்டுமே சமூக ஊடகங்களில் பேசப்படவில்லை. அதனுடன் சேர்த்து பிரிட்டன் ஆட்சியில் கிழக்கிந்திய கம்பெனி 17ஆம் நூற்றாண்டில் இந்துக்களை பெருமைப்படுத்தும் விதமாக வெளியிட்ட நாணயங்களைப் பற்றியும் பேசப்படுகிறது.

இங்கிலாந்தின் ஏஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் பணிபுரியும் நாணய நிபுணர் ஷேலேந்திர பாண்டேரிடம் இது குறித்து பேசினோம்.

"நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புராதன நாணயங்களைப் போன்ற தோற்றம் கொண்ட நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அவை தற்போதும் மதச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன" என்று ஷேலேந்திர பாண்டேர் கூறுகிறார்.

"துறவிகளும், சாமியார்களும் பெரும்பாலும் இதுபோன்ற நாணயங்களை ஊக்குவிக்கின்றனர். இவர்கள் ஏழை மக்கள் மற்றும் தங்களை பின்பற்றுபவர்களை இந்த நாணயங்களை வாங்க பரிந்துரைக்கின்றனர்."

"ஆனால் இந்த நாணயங்கள் எந்த வகையிலும் வரலாற்று ரீதியாக அங்கீகாரம் பெறமுடியாது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: