ஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்?

பட மூலாதாரம், KAZUHIRO NOGI
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ஜப்பானின் பேரரசியாகும் மாசகோ - என்ன சொல்கிறார்?
ஜப்பான் பட்டத்து இளவரசி மாசகோ தான் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நாட்டின் பேரரசியாக பதவியேற்கவுள்ளது குறித்து "பாதுகாப்பற்று" உணர்வதாகவும், ஆனால் ஜப்பான் மக்களுக்கு தன்னாலான சிறந்த சேவையை அளிப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜப்பானின் பேரரசாக உள்ள 84 வயதாகும் அக்கிட்டோ, வயது மூப்பு மற்றும் உடல்நிலையின் காரணமாக தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் விலகவுள்ளார். அதையடுத்து தற்போது ஜப்பானின் பட்டத்து இளவரசியாக உள்ள மாசகோ, அவரது கணவரும், பட்டத்து இளவரசருமான நாரூஹீட்டோ நாட்டின் அரியணை ஏறவுள்ளனர்.
மன அழுத்தம் தொடர்பான பிரச்சனையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த மாசகோ, தான் மெதுவாக குணமடைந்து வருவதாகவும், இன்னும் அதிகளவிலான அரச பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கப்போவதாகவும் கூறுகிறார்.

கோரிக்கையை மறுத்த சௌதி அரேபியா

பட மூலாதாரம், AFP
சௌதி அரேபிய பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்துக்குரிய இரண்டு சௌதி அரேபியாவை சேர்ந்தவர்களை நாடு கடத்தும்படி துருக்கி முன்வைத்த கோரிக்கையை ஏற்பதற்கு சௌதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மறுத்துவிட்டார்.
"எங்களது நாட்டின் குடிமக்களை நாங்களே நாடு கடத்துவதில்லை" என்று அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சரான அடேல் அல்-ஜுபேர் தெரிவித்துள்ளார்.
ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் சௌதி இளவரசர் சல்மானின் உதவியாளர் உள்பட இருவரை நாடு கடத்துவதற்கு உதவுமாறு கடந்த வாரம் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் தலைமை செயலதிகாரி

பட மூலாதாரம், Reuters
மியான்மரில் மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டை சிறந்த சுற்றுலா தலம் என்று கூறிய ட்விட்டர் தலைமை செயலதிகாரி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தியானம் மேற்கொள்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் மியான்மருக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்து ட்விட்டரில் தொடர் பதிவுகளை இட்டுள்ள ஜாக் டோர்ஸி, "அங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதுடன், உணவு வகைகளும் அருமையாக உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள நாடுகளான வங்கதேசம், இந்தியா ஆகியவற்றில் லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளவும், வன்முறையிலிருந்து தப்பிக்கவும் தஞ்சம் புகுந்தனர்.

அர்மேனிய தேர்தலில் பிரதமர் முன்னிலை

பட மூலாதாரம், Reuters
அர்மேனியாவில் முன் கூட்டியே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் நிகோல் பாஷியான் முன்னிலை வகிக்கிறார்.
அர்மேனியாவில் கடந்த ஏப்ரல் மாதம் பல வாரங்களுக்கு ஊழலுக்கு எதிராக நடந்த "வெல்வெட் புரட்சி" என்னும் போராட்டத்தை அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகளுடன் சேர்ந்து முன்னெடுத்தவர் இவர். பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியான இவர், ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் பதினோரு அரசியல் கட்சிகளும், கூட்டணிகளும் போட்டியிட்டாலும், பஷின்யானின் 'மை ஸ்டெப் அலையன்ஸ்' பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












