இன்டர்போல் தலைவர் தேர்தலில் ரஷ்ய வேட்பாளர் அதிர்ச்சித் தோல்வி - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Interpol
இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய வேட்பாளர் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தென்கொரிய வேட்பாளர் கிம் ஜோங்-யாங் வெற்றி பெற்றுள்ளார்.
194 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள இன்டர்போல் அமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தல் துபாயில் நடந்த அந்த அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் நடைபெற்றது.
அதில் பெரிதும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய வேட்பாளர் அலெக்ஸாண்டர் புரொகோப்சக் தோல்வியடைந்தார். இவர் தற்போது இந்த அமைப்பின் துணைத் தலைவராக இருக்கிறார். ரெட் அலர்ட் எனப்படும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான எச்சரிக்கை விடுக்கும் முறையை தவறாகப் பயன்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு இருந்தது.
தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷ்ய அதிபர் புதினை விமர்சிப்பவர்களைக் குறிவைப்பதற்காக தமது பதவியை அவர் பயன்படுத்துவார் என்று மாநாட்டில் கவலை நிலவியது.
அவர் தமது துணைத் தலைவர் பதவியில் தொடர்வார் என்றும், சர்வதேச போலீஸ் சமூகத்தில் நிறுவனத்தின் நிலையை வலுவாக்கப் பாடுபடுவார் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய வேட்பாளரின் பெருமையைக் குலைக்கும் வகையில் நடந்த பிரசாரத்தால்தான் அவர் தோற்றதாக ரஷ்ய குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னர் இன்டர்போல் தலைவராக இருந்த சீனர் மெங் ஹோங்வேய் கடந்த செப்டம்பர் மாதம் சீனா சென்றிருந்தபோது காணாமல் போனார். அதன் பிறகு அவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்து விசாரிக்கப்படுவதாக சீனா உறுதிப்படுத்தியது. இதையடுத்து தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, இன்டர்போலுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் அமெரிக்க செனட்டர்கள் சிலர் தலையிடுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பதவிக்கான ரஷ்யாவின் வேட்பாளர் அலெக்ஸாண்டர் புரொகோப்சக்-ஐ நிராகரிக்கவேண்டும் என்று நான்கு அமெரிக்க செனட்டர்கள் திங்கள் கிழமை அறிக்கை விடுத்தனர்.
ரஷ்ய உள்துறை அமைச்சக அதிகாரியான அவரை தேர்ந்தெடுப்பது கோழிக் கூண்டுக்குப் பொறுப்பாக நரியை வைப்பதைப் போன்றதாகும் என்று அவர்கள் கூறினர்.
யார் இந்த கிம் ஜோங்-யாங்
இன்டர்போலின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 57 வயது கிம் ஜோங்-யாங் தென்கொரியாவின் மக்கள் தொகை மிகுந்த கையோங்கி மாநிலத்தின் போலீஸ் துறைத் தலைவராக இருந்தவர். தலைவராக இருந்த மெங் ஹோங்வேய் சீனாவில் கைது செய்யப்பட்டபிறகு மூத்த துணைத் தலைவராக இருந்த இவர் செயல் தலைவராக இருந்துவந்தார்.
தற்போது புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிம், மெங்-கின் பதவிக் காலத்தில் மீதமுள்ள இரண்டாண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்.
இன்டர்போல் அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளை கவனிப்பது அதன் தலைமைச் செயலாளரான ஜர்ஜென் ஸ்டாக். தலைவர் பதவி என்பது பொதுவில் அலங்காரப் பதவி என்றபோதும் இப்பதவியின் மூலம் செல்வாக்கு செலுத்த முடியும்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பேசிய கிம், "முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களை உலகம் சந்தித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரிய சவால் நிலவுகிறது. அவற்றை வெற்றி கொள்வதற்கு நமக்கு தெளிவான பார்வை வேண்டும். எதிர்காலத்துக்கு இணைப்பு பாலம் அமைக்கவேண்டும்" என்று கூறினார்.
ஏன் புரகோப்சக் சர்ச்சைக்குரியவர்?
பல ஆண்டுகள் ரஷ்யாவின் உள்துறையில் பணியாற்றியவரான ஜெனரல் புரகோப்சக் இன்டர்போலின் மாஸ்கோ பிரிவுத் தலைவராகப் பணியாற்றியபோது சிவப்பு எச்சரிக்கை அமைப்பை அதிபரை விமர்சிப்பவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உண்டு. ஆனால், இந்த அமைப்பின் நான்கு துணைத் தலைவர்களில் ஒருவராக இவர் பணியாற்றிய காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்ததில்லை.
ஆனால், ரஷ்ய மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிற நாட்டு அலுவலர்களும் புரகோப்சக் இன்டர்போல் தலைவரானால், அதனை அரசியல் எதிரிகளைக் குறிவைக்கப் பயன்படுத்துவார் என்று அஞ்சினர்.
பிற செய்திகள்:
- ‘கஜ’ புயல் பாதிப்பு: "மீண்டும் தென்னை மரங்கள் உருவாக ஒரு தலைமுறையாகும்"
- கஷோக்ஜி கொலை: கண்டனங்கள் இருந்தாலும் சௌதியுடன் உறவு தொடரும் - டிரம்ப்
- ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி
- மத்தியப் பிரதேச தேர்தல்: பழங்குடியினரிடம் இந்துத்துவாவை திணிக்கிறதா பாஜக?
- ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னை மாணவி தேர்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












