பெண்களை வன்புணர்வு செய்த ராணுவ வீரர்கள் - மன்னிப்பு கோரிய தென் கொரியா

பட மூலாதாரம், JEON HEON-KYUN
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
தென் கொரியாவில் 38 வருடங்களுக்கு முன்னர் அரசுக்கெதிராக நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள் அங்கிருந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.
1980ஆம் ஆண்டு குவாங்ஜு நகரத்தை சேர்ந்த அப்பாவி பெண்களின் மீது ராணுவத்தினர் தொடுத்த "விவரிக்க முடியாத வலி நிறைந்த தாக்குதலுக்கு" மன்னிப்பு கோருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விசாரணையின் மூலம் இளம்பெண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி உள்பட 17 பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல்ரீதியான தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதை தவிர்த்து 'மில்லியன் மன்னிப்பு' கோரினாலும் அதற்கு பலனில்லை என்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவரான கிம் சன்-ஓக் கூறுகிறார்.

விடுதலை செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம், PETER TAH
கேமரூனின் பதற்றம் நிறைந்த வடமேற்கு பகுதியிலுள்ள உறைவிட பள்ளியிலிருந்து கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பிராந்தியத்தின் தலைநகரான பாமென்டாவில் கடந்த திங்கட்கிழமை காலை 78 மாணவர்கள் மற்றும் மூவரை பிரிவினைவாதிகள் கடத்தினர்.
கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும், பள்ளியின் ஓட்டுநரும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைமையாசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியர் இன்னமும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையானார் ஆசியா பீபீ

பட மூலாதாரம், Getty Images
தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த கிறித்துவ பெண்ணான ஆசியா பீபீ சிறையிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆசியா பீபீ பாகிஸ்தானிலிருந்து விமானத்தில் புறப்பட்டுவிட்டதாகவும், ஆனால் அவர் என்று செல்கிறார் என்பதில் தெளிவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமையன்று ஆசியா பிபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானதாக இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தததை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகிய ஜெஃப் செஷன்ஸ்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தில், ''அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். அவரது எதிர்காலத்துக்கும் எங்களின் வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இருந்து ஜெஃப் செஷன்ஸ் தன்னை விடுவித்து கொண்ட பிறகு அவரை டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












