உயிருக்குப் போராடிய நபர்; படம் பிடித்த மக்கள் - காவல்துறை அதிகாரி வருத்தம்

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்

உயிருக்குப் போராடிய நபர்; படம் பிடித்த மக்கள் - காவல்துறை அதிகாரி வருத்தம்

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை காப்பாற்ற, காவல்துறை அதிகாரியான கெர்வினும் அவருடன் பணிபுரிபவர்களும் முயற்சிக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் அதனை தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

"இது உண்மையாக இருக்க முடியாது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால், மக்கள் அதனை படம் மட்டுமே பிடித்துக் கொண்டிருந்தார்கள்" என்று வருந்துகிறார் அந்நபரின் மனைவி.

மக்கள் அந்த நபரை காப்பாற்றாமல் படம் பிடித்துக் கொண்டிருந்ததை காவல்துறை அதிகாரியான கெர்வினாலும் நம்பமுடியவில்லை.

இதுகுறித்து நீண்ட பதிவை தனது ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக அவர் சொல்ல வரும் செய்தி இதுதான் : "அது உங்கள் அன்புக்குரியவராக இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?"

தாலிபனின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் கொலை

பாகிஸ்தானில் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில், தாலிபனின் தந்தை என்று அழைக்கப்பட்ட மதகுரு மௌலானா சமி அல்-ஹக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் குத்தி கொலை செய்யப்பட்டார் என மௌலானாவின் குடும்பத்தினர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என சில செய்திகள் தெரிவித்துள்ளன.

அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரவில்லை.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹக்கானியா மசூதிப்பள்ளியின் தலைவராக மௌலானா சமி அல்-ஹக் இருந்தார். தாலிபன் அமைப்பை தோற்றுவித்த முல்லா அமர் உள்பட, தாலிபனின் பல உறுப்பினர்கள் இங்குதான் படித்தனர்.

மீண்டும் இரான் மீது பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா

2015ம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் இரான் மீதான தடைகள் நீக்கப்பட்டது. தற்போது டிரம்ப் நிர்வாகம், இரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர உள்ளது.

அந்நாட்டின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித்துறைகளை இலக்காக கொண்டு, "இதுவரை இல்லாத அளவிற்கு இரான் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகள் இவை" என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

எனினும், இரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகளை அமெரிக்கா தண்டிக்காது.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன்,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை கடந்த 2015ஆம் ஆண்டு இரான் மீது எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் அணுஉடன்பாட்டில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மே மாதம் தெரிவித்தார்.

தூக்க மாத்திரையால் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட நபர்

விமான பயணத்திற்கு முன் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட கனடா நபரை, பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானகரமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் கிளம்பும் சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை கேபின் உறுப்பினர் எழுப்ப முயன்றார்.

அவர் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமானநிலை மருத்துவர்கள் கூறியும், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்துக் கொண்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: