பிட்ஸ்பர்க் துப்பாக்கிசூடு : எல்லா யூதர்களையும் கொல்லவிரும்பிய தாக்குதல்தாரி

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

கொல்லவிரும்பிய துப்பாக்கிதாரி

அமெரிக்க பிட்ஸ்பர்க் யூத வழிபாட்டு மையத்தில் புகுந்து 11 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரி பிடிபட்டவுடன், தாம் அங்கிருந்த எல்லா யூதர்களையும் கொல்ல விரும்பியதாக அலுவலர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் பெயர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் 97 வயது பெண்மணி ஒருவரும், ஒரு கணவன் மனைவியும் அடக்கம்.

சனிக்கிழமை நடந்த இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைத் தவிர, நான்கு பெண் போலீசார் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

மீண்டும் திறக்கப்பட்ட அருங்காட்சியகம்

உள்நாட்டு போரினால் மூடப்பட்ட சிரியா தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி ஆறு ஆண்டுகளுக்கு பின் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. போரினால் இந்த டமாஸ்கஸ் அருங்காட்சியகத்தில் உள்ள தொன்மையான கலைப்பொருட்கள் சிதிலமடையக் கூடாது என்பதற்காக 2012 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

ஜெர்மன் ஆளும் கூட்டணி பிராந்தியத் தேர்தலில் தோல்வி

ஜெர்மனியில் ஆளும் ஏஞ்சலா மெர்கல் கூட்டணி அரசில் உள்ள இரு கட்சிகளும் பிராந்திய தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன. முந்தைய தேர்தலை விட அவரின் மைய வலது சிடியு கட்சியும், மத்திய இடது எஸ்பிடி கட்சியும் 10 சதவீத வாக்குகளைஹெஸ் மாகாணத்தில் குறைவாக பெற்றுள்ளன. எஸ்பிடி கட்சியின் தலைவர் ஆண்ட்ரியா மத்திய அரசின் மோசமான செயல்பாடுதான் இந்த தோல்விக்கு காரணமென்று கூறி உள்ளார்.

வலதுசாரி வெற்றி

பிரேசில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளரான சயீர் பொல்சனாரூ மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட சூழ்நிலையில் பொல்சனாரூ 55 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஃபெர்னாண்டோ 45 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். ஃபெர்னாண்டோ இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.

இஸ்ரேல் வான்தாக்குதல்

இஸ்ரேல் காஸா எல்லையில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் மூன்று பேர் இறந்தனர் என்கிறார் பாலத்தீன அதிகாரி. ஹமாஸால் ஆட்சி நடக்கும் காஸா பகுதியின் சுகாதார அமைச்சர், இறந்த மூன்று சிறுவர்களுக்கும் வயது 12 முதல் 14 வரை இருக்கும் என்கிறார். கான் யூனிஸ் அருகே நடந்த வான் தாக்குதலில் இவர்கள் இறந்ததாக கூறுகிறார். இந்தப் பாலத்தீனர்கள் தெற்கு காஸா எல்லை வேலி அருகே வெடிகுண்டுகளை புதைத்துவைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :