“ஆறு கேள்வி, பதில்” - இதற்கிடையே சிக்கி தவிக்கும் மத்திய அமெரிக்க மக்களின் துயர்மிகு வாழ்வு

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மெக்சிகோ வழியாக வடக்கு திசையில் ஊர்வலமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எப்படியாவது அமெரிக்காவை அடைந்து வேண்டும் என்ற இலக்குதான் அவர்களை உந்தி தள்ளுகிறது.

ஏன் அமெரிக்கா?

தங்கள் நாடுகளில் தங்களுக்கென எந்த பொருளாதார வாய்ப்பும் இல்லை. எப்படியாவது அமெரிக்கா சென்று விட்டால் வாழ்வு மாறும், வசந்தம் வரும், இதுவெல்லாம் நிகழாவிட்டாலும் தங்கள் குழந்தைகள் வன்முறையிலிருந்து தள்ளி இருப்பார்கள். இப்போது இருக்கும் வாழ்க்கையைவிட மேம்பட்ட வாழ்க்கை குறைந்தபட்சம் கிடைக்கும் என்பதுதான் அவர்கள் நம்பிக்கை.

எத்தனை பேர் செல்கிறார்கள்?

ஐ.நா கணக்கீட்டின் படி, 1,000 பேருடன் தொடங்கிய அந்த ஊர்வலம் 7,000 பேராக உயர்ந்திருக்கிறது. அரசியல் பார்வையாளர்கள் இந்த மக்கள் ஊர்வலத்தை 'மக்களின் ஆறு' என்று வர்ணிக்கிறார்கள்.

புகைப்பட பத்திரிகையாளர் என்கார்னி பிண்டாடோ, குவாட்டமாலா - மெக்சிகோ எல்லையில் இந்த மக்கள் ஊர்வலத்தை பின்தொடர்ந்து புகைப்படங்களாக ஆவணப்படுத்தி உள்ளார்.

ஊர்வலமாக செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

இலங்கை தொடர்பான செய்திகள்:

எப்போது எங்கிருந்து கிளம்பினார்கள்?

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸிலிருந்து அக்டோபர் 13ஆம் தேதி கிளம்பினார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த நாட்டில் குற்றங்கள் அதிகம் நிகழும் சான் பெட்ரோ சுலாவிலிருந்து கிளம்பினார்கள்.

ஹோண்டியுரஸ் எங்கும் வன்முறையின் ரேகை படர்ந்து இருக்கிறது. எங்கு காணினும் குற்றங்கள். பொருளாதாரம் இல்லை. இப்படியான சூழலில் தம் பிள்ளைகள் வளர வேண்டாமென அவர்கள் கிளம்பி இருக்கிறார்கள்.

அமெரிக்கா என்ன சொல்கிறது?

தேர்தல் பிரசாரத்தின் போதே குடியேறிகளுக்கு எதிராக பேசி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை எப்படி அனுமதிப்பார்.

அவர் காத்திரமாக இந்த மக்களை தம் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென சொல்லிவிட்டார்.

இந்த ஊர்வலத்திற்காக ஜனநாயகக் கட்சியை சாடிய அவர், ஒரு படி மேலே சென்று இந்த ஊர்வலத்தில், குற்றவாளிகளும், மத்திய கிழக்கு மக்களும் கலந்துவிட்டார்கள் என குற்றஞ்சாட்டினார். ஆனால், அவர் இது தொடர்பாக எந்த ஆதாரத்தையும் தரவில்லை.

புகலிடம் கோருவோர் என்ன கூறுகிறார்கள்?

"அடைக்கலம் கோருதல் ஒன்றும் தவறில்லை, எல்லைகளை கடந்து எங்களை பயணிக்க விடுங்கள்" என்கிறார்கள் அம்மக்கள்.

எந்த நாடுகளும் அவர்களை தடுத்து நிறுத்தவில்லையா?

பெரும்பாலான நாடுகள் தடுத்து நிறுத்தாத போது, மெக்சிகோ அவர்களை தடுத்து நிறுத்தியது.

ஆனாலும், குடியேறிகள் தடுப்புகளை உடைத்துவிட்டு முன்னேறி சென்றனர்.

கற்களை கொண்டு தாக்கப்பட்டப் பின்பு டஜன் கணக்கான மெக்சிகோ போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

ஊடகவியலாளர்கள், குடியேறிகள், காவல்துறையினர் உட்பட பலர் இதில் காயம் அடைந்தனர்.

குடியேறிகள் சூட்சியாடே ஆற்றில் குதித்து தப்பி சென்றனர்.

அதே நேரம், மெக்சிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளில், தஞ்சம் கோரியவர்களுக்கு தற்காலிக பணி அனுமதி வழங்கியுள்ளது மெக்சிகோ.

இப்போது அந்த மக்களின் நிலை என்ன?

மெக்சிகோ எல்லையில் சுயூடட் இடால்கோ சதுக்கத்தில் இந்த மக்கள் சாலை ஓரங்களில் தங்கி இருக்கிறார்கள்.

உள்ளூர் மக்கள் இந்த குடியேறிகளுக்கு உதவி வருகிறார்கள். உணவு, உடை என தங்களால் இயன்றதை வழங்கி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :