இலங்கை: ராஜபக்ஷ ஆதரவு கூட்டத்தில் பங்கேற்ற ரணில் கட்சி எம்.பி. - கட்சித்தாவல் தொடங்குகிறதா?

ராஜபக்ஷவை பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்ததை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை ஒட்டி, ராஜபக்ஷ ஆதரவு அரசியல் தலைவர்கள் கொழும்புவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஒருவரும் பங்கேற்றார்.

ஆனந்த அலுத்த மகே என்ற அந்த எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சியில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 20 எம்.பி.க்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லை என்பதால் எந்தக் கட்சியில் வெற்றி பெற்ற எம்.பி.யும் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்கத் தடையில்லை என்கிறார் செய்தியாளர் ஒருவர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை தொழிலாளர் கட்சித் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கள் கட்சி ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்தார். அந்தக் கட்சிக்கு 2 எம்.பி.க்கள் உள்ளனர்.

அலரி மாளிகைக்கு அவகாசம்...

ரணில் பிரதமர் அல்ல என்று கூறப்பட்டாலும், அவர்தானே பிரதமருக்கான அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருக்கிறார் என்று கேட்கப்பட்டபோது, "அவருக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரைதான் அவகாசம். அவராக மரியாதையாக அலரி மாளிகையை காலி செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்ஷ ஆதரவு எம்.பி. விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

சரத் ஃபொன்சேகா கருத்து

எங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை பொறுத்தவரை ஜனாதிபதிக்கு அரசைக் கலைக்கவோ, பிரதமரை அகற்றவோ அதிகாரமில்லை. மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்தாவை ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.

மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் இதனால் பாதிப்பு என்று கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க-வை ஆதரிக்கும் அமைச்சர் சரத் பொன்சேகா.

கெஹலிய ரம்பூக்வெல்ல

பொருளாதாரத்தில், கலாசாரத்தில், பாதுகாப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைகிறது. நிதித்துறை, வங்கித்துறை ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் துன்பப்படக்கூடாது என்று நினைத்து, முன்பே திறமையை நிரூபித்த ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனாதிபதி. நாடு தற்போது சிக்கலில் இல்லை. சிக்கலில் இருந்து மீள்கிறது என்றார் மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் கெஹலிய ரம்பூக்வெல்ல.

அனுரா பிரியதர்ஷன யாபா

நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. எளிய மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியாக இல்லை. இலங்கை ரூபாய் 28 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்னும் வீழ்கிறது. இவற்றையெல்லாம் பிரதமர் ரணில் தலைமையிலான அரசு புரிந்துகொள்ளவில்லை. எனவே ஜனாதிபதி சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்று சிரிசேனாவின் கட்சியைச் சேர்ந்த அனுரா பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :