You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜமால் கஷோக்ஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் - முகமது பின் சல்மான்
துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நிச்சயம் கடுமையாக தண்டிக்க தான் உறுதியாக இருப்பதாக செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற ஒரு வணிக குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், ''அனைத்து செளதி மக்களுக்கும் வலி தருவதாக இந்த குற்றம் நடைபெற்றுள்ளது,'' என்று கூறினார்.
ஜமால் கஷோக்ஜியின் கொலையில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை முகமது பின் சல்மான் முன்பு மறுத்திருந்தார்.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
இந்த கொலைக்கு கூலிப்படையினர்தான் காரணம் என்று செளதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
செளதி அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் முக்கியமானவராக இருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது செளதி உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளால் பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் முன்பு தெரிவித்தார்.
என்ன சொல்கிறார் சல்மான்?
இந்நிலையில் துருக்கியில் உள்ள செளதி தூதரகத்தில் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டபிறகு முதல்முறையாக இது குறித்து தற்போதுதான் இளவரசர் முகமது பின் சல்மான் பேசியுள்ளார்.
இந்த கொலை ''நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான குற்றம்'' என்றும் தெரிவித்த அவர், ''இந்த குற்றத்துக்கு பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இறுதியில் நீதியே வெல்லும்' என்று குறிப்பிட்டார்.
துருக்கியுடன் செளதி அரேபியாவுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறிய சல்மான், ''வலி தரும் இந்த சூழலை பயன்படுத்தி துருக்கி மற்றும் செளதி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்'' என்று குற்றம் சாட்டினார்.
''அவர்களுக்கு நான் கூறி கொள்ளும் தகவல் என்னவென்றால், உங்கள் எண்ணம் பலிக்காது என்பதுதான்'' என்று சல்மான் மேலும் கூறினார்.
முன்னதாக, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி அரேபியா நடந்துகொண்ட விதம் மிக மோசமான மூடிமறைப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.
"இந்த கொலையை திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :