சுட்டுக் கொல்லப்பட்ட பெற்றோர், காணாமல்போன 13 வயது சிறுமியை தேடும் போலீஸ்

சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோர்

பெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை அமெரிக்காவின் விஸ்கன்சின் மாகாண அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அந்த சிறுமியின் பெற்றோர், ஜேம்ஸ் மற்றும் டெனிஸ் க்லாஸ், சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர், அச்சிறுமியும் தற்போது ஆபத்தை எதிர்கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அவசர உதவி எண்ணான 911-ன் தரவுகளின்படி, தாக்குதல் நிகழ்ந்தபோது அச்சிறுமி வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. கொலையில் அச்சிறுமி மீது சந்தேகம் இல்லையென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பெண்களிடம் மன்னிப்பு கேட்கும் நார்வே

இரண்டாம் உலகப் போரில் நார்வே, நாஜி ஜெர்மன் படையெடுப்புக்கு உள்ளானபோது, ஜெர்மன் ராணுவத்தினருடன் உறவில் இருந்த தங்கள் நாட்டுப் பெண்களை மோசமாக நடத்தியதற்காக நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஏப்ரல் 1940இல் நாஜி ஜெர்மன், நார்வே மீது படையெடுத்தது. ஜெர்மன் ராணுவத்தினரிடம் சுமார் 50,000 நார்வே பெண்கள் நெருக்கமான உறவில் இருந்ததாக அப்போது கருதப்பட்டது.

அவர்களில் பல பெண்கள், அவர்களது குழந்தைகளுடன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

டாஸ்மானியாவில் நாய் கடித்து 58 பென்குயின்கள் மரணம்?

ஆஸ்திரேலியா அருகில் உள்ள டாஸ்மானியா-வில் 58 பென்குயின்கள் கடிபட்டு இறந்து காணப்பட்ட நிலையில் அவை நாய் கடித்து இறந்தனவா என்று வனவிலங்குத் துறை அலுவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.

இத்தீவின் வடக்கு கடலோரப் பகுதியில் இந்த பென்குவின்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் வனவிலங்குத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இறந்துகிடந்தவை உள்ளூர் வகையான, லிட்டில் பெங்குயின் எனப்படும் சிறிய வகை பென்குயின்கள். இந்த வகை பென்குயின்கள் மீது கடந்த சில மாதங்களில் இப்படி பென்குயின்கள் கடிபட்டு இறப்பது இது இரண்டாவது முறை.

நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை ஒழுங்காகப்பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும், வளர்ப்பு நாய்களின் இது போன்ற செயல்களுக்கு அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் முன்பு எச்சரித்திருந்தனர்.

'ட்ரோல்' ட்வீட்களை வெளியிட்ட ட்விட்டர்

ரஷ்ய மற்றும் இரானிய அரசுகளின் ஆதரவுடன் ட்விட்டரில் பதிவிடப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) மேலான இழிவாகப் பகடி செய்யும் ட்வீட்களை அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

தங்கள் தளம் பொதுப் புத்தியில் தாக்கம் செலுத்த எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த ஆய்வுகளுக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :