ஹார்வார்டு பல்கலையில் இட ஒதுக்கீடு: வேண்டும்-வேண்டாம் என போராட்டம், வழக்கு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை இனக்குழுக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஆசிய விண்ணப்பதாரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பாஸ்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடங்கியது.
இன பாரபட்சத்துடன் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தை மறுக்கும் இந்தப் பல்கலைக்கழகம், சேர்க்கைக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் அளவு கோல்களில் 'இனம்' என்பது சிறு காரணி மட்டுமே என்று தெரிவித்துள்ளது.
இந்த நீதிமன்ற விசாரணையின் முடிவு, 'அஃபர்மேடிவ் ஆக்ஷன்' என்று அழைக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறை மீதான தீர்ப்பாகப் பார்க்கப்படும்.
அத்துடன் இத்தீர்ப்பு பல்கலைக்கழகங்கள் மீதும் சிறுபான்மை இனங்கள் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆண்டுதோறும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு 42 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. அவற்றில் இருந்து 1,600 தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இந்த அளவு முதலாமாண்டு மாணவர்களை சேர்க்கும் வெகு சில, உயர்தரப் பல்கலைக்கழகங்களில் ஹார்வார்டும் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
திங்கள்கிழமை நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு மாணவர் குழுக்கள் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தெருவில் இறங்கிப் போராடின.
"நியாயமான சேர்க்கைக்கான மாணவர்கள்" என்ற பொருள்தரும் "ஸ்டூடன்ஸ் ஃபார் ஃபேர் அட்மிஷன்ஸ்" என்ற வாஷிங்டன் டிசி-ஐ சேர்ந்த அமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. இனத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை நடைபெறுவது குடிமை உரிமை மீறல் என்கிறது என்று வாதிடுகிறது இந்த அமைப்பு.
என்ன சொல்கிறது வழக்கு?
ஹார்வார்டு பல்கலைக்கழகம் தமது சேர்க்கை வழிமுறையில் விண்ணப்பதாரரின் இனத்தை ஒரு காரணியாக எடுத்துக் கொள்வதால் ஆசிய-அமெரிக்கர்கள் இப்பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்கிறது வழக்கு.
பல இனக்குழுக்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடம் அளிக்கும் வகையில் ஆசிய மாணவர்கள் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, இட ஒதுக்கீடு அல்லது 'இன சமநிலைப் படுத்தல்' கொள்கை ஒன்றை இந்தப் பல்கலைக்கழகம் கையாள்கிறது; இது அமெரிக்க கூட்டாட்சி சட்டத்துக்கு எதிரானது என்கிறது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு.
ஆசியர்களின் கல்வி செயல்பாடு நன்கு இருப்பதால், தகுதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றால் தற்போது உள்ளதைப் போல இருமடங்கு ஆசியர்கள் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருப்பார்கள் என்றும் வாதிடுகிறது இந்த மனு.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் சேர்க்கை நடைமுறை முழுவதையும் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரும். பல்கலைக்கழக வளாகங்களில் பன்மைத்துவத்தை பேண வேண்டும் என்பதற்காக இனத்தை சேர்க்கையின்போது ஒரு கூறாக எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பு நீதிமன்றம் அனுமதித்தது. இந்த கொள்கை 'அஃபர்மேடிவ் ஆக்ஷன்' அல்லது தலைகீழ் பாரபட்சம் (reverse discrimination) என்று அழைக்கப்படுகிறது.
முன்னாள் மாணவர் அல்லது நன்கொடையாளர் ஒருவரின் பிள்ளையின் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் எப்படி அணுகுகிறது என்பது போன்ற எதிர்பாராத விஷயங்களையும் இந்த விசாரணை வெளிக்கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்வார்டு என்ன சொல்கிறது?
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல் அவர்களை முழுமையாக மதிப்பிடும் ஒரு முறையை கையாள்வதாகவும், இதில் இனம் என்பதற்கு சிறு முக்கியத்துவம் மட்டுமே அளிக்கப்படுவதாகவும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் கூறுகிறது.
"தேர்வில் மட்டும் நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதைப் பார்க்காமல் உண்மையிலேயே ஆர்வமாக, புரிந்துகொள்ளும் திறனுடன் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நினைக்கிறோம்" என்கிறார் ஹார்வார்டு பல்கலைக்கழக டீன் ராகேஷ் குரானா.

பட மூலாதாரம், Getty Images
தங்கள் மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஆசியர்கள் என்பதையும் இப்பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டுகிறது.
யாருக்கு யார் ஆதரவு?
ஐவி லீக் என்று கூறப்படும் முக்கியத் தனியார் பல்கலைக்கழக குழுவில் ஒன்று ஹார்வார்டு. இந்த குழுவைச் சேர்ந்த பிற பல்கலைக்கழங்களும், அமெரிக்க சிவில் உரிமை ஒன்றியமும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை இந்த விஷயத்தில் ஆதரிக்கின்றன.
பல்கலைக்கழகத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "இனத்தை கவனத்தில் கொண்டு செய்யப்படும் சேர்க்கைகளால் பன்முகத்தன்மை உள்ள மாணவர்களின் அமைப்பாக திரள்வதற்கு பல்கலைக்கழகத்துக்கு உள்ள சுதந்திரம் மேம்படும்" என்று அமெரிக்க சிவில் உரிமை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வழக்கைத் தொடர்ந்துள்ள 'ஸ்டூடன்ஸ் ஃபார் ஃபேர் அட்மிஷன்ஸ்' அமைப்பைத் தொடங்கிய பழமைவாத செயற்பாட்டாளர் எட்வார்ட் பிளம் இட ஒதுக்கீட்டு முறையை எதிர்க்கிறார்.
டிரம்ப் நிர்வாகம் மனு
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இதுபோல் பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையால் ஒரு வெள்ளையின மாணவருக்கு எதிராக பாரபட்சம் நிகழ்ந்ததாக இவர் முன்பு ஒரு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை 4-க்கு 3 என்ற பெரும்பான்மை அடிப்படையில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஸ்டூடன்ஸ் ஃபார் ஃபேர் அட்மிஷனின் வாதத்துக்கு ஆதரவாக டிரம்ப் நிர்வாகம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஆசியர்களுக்கு எதிராக 'யேல்' பல்கலைக்கழகம் பாரபட்சம் காட்டுகிறதா என்பது குறித்தும் அமெரிக்காவின் நீதித்துறை விசாரிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை 'யேல்' பல்கலைக்கழகம் மறுக்கிறது.
ஹார்வார்டு பல்கலைக்கழக வழக்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு நடக்கும். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு யாருக்கு எதிராக வந்தாலும் அந்த தரப்பு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












