வீட்டு மாடியில் வளர்க்கும் சிங்கங்களை வெளியேற்ற மறுக்கும் மெக்ஸிகோ மனிதர்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், AFP
தன் வீட்டு மாடியில் வளர்க்கும் சிங்கங்களை வெளியேற்ற மறுக்கும் மெக்ஸிகோ மனிதர்
மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்டை மாடியில் வளர்க்கும் 3 சிங்கங்களை வெளியேற்ற ஒமர் ரோட்ரிகஸ் என்பவர் மறுத்து வருகிறார்.
சிங்கங்கள் முறையாக பார்த்துக் கொள்ளப்பட அவற்றை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒமர் வசிக்கும் பகுதி, அதிக மக்கள் தொகை இருக்கும் இடம் என்பதால் சிங்கங்கள் கர்ஜிப்பது, சுற்றி இருப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று தான் விருப்பப்படுவதால் இவற்றை தாம் வைத்திருப்பதாக ஒமர் எல் யுனிவர்சல் என்ற நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
20 ஆண்டுகளாக இந்த சிங்கங்களை அவர் வளர்பதாகவும், இதற்கு முறையான ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"நானும் டிரம்பும் ஒன்றாக இருக்கிறோம்": மெலினியா டிரம்ப்

பட மூலாதாரம், AFP
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிறரோடு தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் தாம் கவனம் செலுத்தவில்லை என அதிபரின் மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலினியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், அவர்களின் திருமணம் குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் சரியானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்பை அவர் காதலிக்கிறாரா என்று கேட்டதற்கு, ஆம் என்று கூறிய மெலினியா, அவர்கள் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

உகாண்டா: நிலச்சரிவில் 40 பேர் பலி

பட மூலாதாரம், EPA
உகாண்டாவின் கிழக்கு பகுதியில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசு மீட்பு குழுவினர் எல்கன் மலைப்பகுதியை அடையும்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கனமழையால் நதிநீர் கரையை தாண்டி பெருக்கெடுத்து ஓடியதில் கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன. மலைப் பகுதியில் காணாமல் போனோரை தேடுவதற்கும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவ உகாண்டா பிரதமர் அலுவலகம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

சிசரியன் வழி குழந்தை

பட மூலாதாரம், Getty Images
சில நாடுகளில் பிரசவத்தின்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறை பயன்படுத்துவது கடந்த 15 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
2000ம் ஆண்டு 16 மில்லியன் பிரசவங்களில் (12%) அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதுவே, 2015ம் ஆண்டில் இது 29.7 மில்லியனாக (21%) உயர்ந்துள்ளது என அந்த சஞ்சிகை கூறுகிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












