You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜமால் கசோஜி: மாயமான பத்திரிகையாளரை சௌதி தூதரகத்தில் தேட துருக்கி முடிவு
காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி-யை இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்தில் தேடப் போவதாக துருக்கி கூறியுள்ளது.
ஜமால் கசோஜி விவகாரத்தில் புலனாய்வுக்கு ஒத்துழைக்கத் தயராக இருப்பதாக சௌதி அரேபியா கூறியுள்ள நிலையில், துருக்கி வெளியுறவு அமைச்சகம், புலனாய்வின் ஒரு பகுதியாக தூதரக கட்டடத்திற்குள் அவர்களிடம் கேட்டு தேடுதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்த துணைத் தூதரகத்திற்கு சென்ற பின்னர் ஜமால் கசோஜியை காணவில்லை.
அவர் தூதரகத்திற்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று துருக்கி கூறுகிறது. இந்த குற்றச்சாட்டை சௌதி அரேபியா மறுக்கிறது.
வந்து சேர்ந்த சற்று நேரத்தில் இந்த பத்திரிகையாளர் துணைத் தூதரகத்தை விட்டு சென்று விட்டதாக சௌதி கூறுகிறது. கட்டடத்தை விட்டு அவர் வெளியேறியது தெரியவில்லை என்கிறது துருக்கி.
துணைத் தூதரகத்திற்குள் கொல்லப்படவில்லை என்றால், ஜமால் கசோஜி தூதரகத்தை விட்டு வெளியேறியதை சௌதி அரேபியா நிரூபிக்க வேண்டுமென துருக்கி கோரியுள்ளது.
ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்த ஜமால் கசோஜி, பின்னர் செளதி அரசுக்கு எதிராகத் திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.
ஜமால் கசோஜி காணாமல் போகும் முன்பு வரை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் எழுதியும் வந்தார்.
ஜமால் கசோஜி காணாமல் போனதற்கு 3 நாட்களுக்கு முன்பு, பிபிசி நியூஸ்ஹவர் அவரை பேட்டி கண்டது. ஒளிப்பரப்பாகாத உரையாடலின்போது அவர் தாய் நாட்டுக்குத் திரும்புவாரா என்று கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு அவர் "என்னால் போகமுடியும் என்று நினைக்கவில்லை" என்று பதில் அளித்திருந்தார். சௌதியில் கைது செய்யப்படுகிறவர்கள், அதிருப்தியாளர்கள்கூட அல்ல என்றும், நாடு பெரிய மாற்றத்தை சந்தித்துவரும் இந்த காலத்தில் சுதந்திரமாக சௌதியில் எழுதவும், பேசவும் ஒரு தளம் இருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த உரையாடலின் ஒலிப்பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இவ்வாறு செய்வதில்லை என்றாலும், விதிவிலக்காக, தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமால் கசோஜி பற்றி கவலை அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த பத்திரிகையாளர் காணாமல் போயுள்ளது பற்றிய புலனாய்வில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, புலனாய்வு முடிவுகள் வெளிப்படையாக இருக்க வேண்டுமென கூறியுள்ளார்.
சில நிமிடங்களில் அல்லது ஒரு மணிநேரத்தில் சௌதி துணை தூதரகத்தை விட்டு சென்றுவிட்ட ஜமால் கசோஜிக்கு என்ன நடந்தது என அறிய ஆர்வமாக இருப்பதாக சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த வாரம் பூளும்பர்க் நியூஸிடம் தெரிவித்துள்ளார்.
ஜமால் கசோஜி காணாமல் போனது அல்லது இறப்பு பற்றிய அனைத்து செய்திகளும் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்று பட்டத்து இளவரசர் முகமதுவின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சௌதி அரேபிய தூதருமான காலீத் கூறியுள்ளார்.
"ஜமாலுக்கு அதிக நண்பர்கள் உண்டு. அதில் நானும் ஒருவர்" என்று தெரிவித்துள்ள காலீத், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜமால் கசோஜி வெளிநாட்டில் வாழ்ந்து வந்தபோதும் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்,
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்