You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பிற்கு முக்கிய வெற்றி: அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியானார் பிரெட் கேவனோ
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சர்ச்சை டிரம்பிற்கு ஆதரவாக முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 50 உறுப்பினர்கள் பிரெட் கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்திருந்ததை தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்கவுள்ளார்.
தனது மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் பிரெட் கேவனோ அதை நிரூபிப்பதற்கு கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில், கேவானோவிடம் தொடர்ந்து 11 மணிநேரம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ நடத்திய விசாரணைக்கு பிறகே, அவருக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.
அமெரிக்காவில் மாகாணங்களுக்கான தேர்தல்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரெட் கேவானோ மீதான சர்ச்சைக்கு அதிபர் டிரம்பிற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க செனட் சபையில் ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில், வாஷிங்டனில் பெருந்திரளான மக்கள் கேவனோவின் நியமனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, செனட் சபையின் நடவடிக்கையை பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருத்தவர்கள், "வெட்கக்கேடு" என்றும், துணை அதிபர் மைக் பென்ஸ் கேவனோவின் பரிந்துரையை திரும்பப்பெற வேண்டுமென்றும் குரல் கொடுத்தனர்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்றுள்ளதன் மூலம், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் பழமைவாத கொள்கையை கொண்டவர்களின் கை ஓங்கியுள்ளது.
ஓட்டெடுப்பில் ஆதரவான முடிவு கிடைத்தவுடன், சனிக்கிழமை மாலையன்று அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வாழ்நாள் நீதிபதியாக 53 வயதாகும் பிரெட் கேவனோ பதவியேற்றுக்கொண்டார்.
என்ன சொல்கிறார் டிரம்ப்?
பிரெட் கேவனோவை வாழ்த்தி இரண்டு ட்விட்டர் பதிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவுசெய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஜனநாயக கட்சியினர் தொடுத்த பயங்கரமான தாக்குதல்" மற்றும் குற்றஞ்சாட்டிய பெண்களின் 'சீற்றத்தை' பிரெட் கேவனோ எதிர்த்து நின்று போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளதாக கூறினார்.
கேவனோ மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பிய பெண்களில் ஒருவரான பேராசிரியர் கிறிஸ்டின் ப்லேசி ஃபோர்டு, 100 சதவீதம் தவறான நபரை குற்றச்சாட்டியுள்ளார் என்று தனக்கு நிச்சயமாக தெரியும் என்று டிரம்ப் கூறினார்.
பின்னணி என்ன?
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கேவனோவை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தவுடன், அவருக்கு எதிராக பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
எனவே, பிரெட் கேவனோவின் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் பேராசிரியர் ஃபோர்ட் தானும் கேவனோவும் பதின்ம வயதில் இருந்தபோது 1982ஆம் ஆண்டு கேவனோவ் தன்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்.
ஆனால், இந்த கூற்றை கேவனோவ் மறுத்துள்ளார். தான் அச்சமயத்தில் ஞாபக சக்தி மங்கும் அளவிற்கு குடித்திருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார் கேவனோ.
கேவனோவுக்கு ஆதரவாக வாக்களித்த செனட் உறுப்பினர் கோலின்ஸ், "பேராசிரியர் ஃபோர்டின் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் அது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
கோலின்ஸுக்கு கருத்துக்கு முன்னாள் அதிபர் எச்.டப்ள்யு. புஷ் மற்றும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் சாரா சாண்டர்ஸ் ஆதரவளித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து, டிரம்ப் உத்தரவிட்ட எஃப்.பி.ஐ விசாரணையில் பிரெட் கேவனோ மீதான குற்றச்சாட்டு தவறானது என்று தெரியவந்ததாக குடியரசு கட்சியினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :