எஜமானியை கடித்துவிட்டு தப்பித்த பாம்பு பிடிப்பட்டது

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தப்பித்த பாம்பு

தனது எஜமானியை கடித்துவிட்டு தப்பித்த மாம்பா என்னும் பாம்பு ஒரு நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் பிடிப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது செக் குடியரசில் நடந்துள்ளது. செக் தலைநகர் ப்ராகில் செவ்வாய்க்கிழமை இந்த பாம்பு தனது எஜமானியை கடித்துவிட்டு தப்பித்தப் பின் மக்களுக்கு இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விஷத்தன்மை அதிகமுள்ள இந்த பாம்பு குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த பாம்பு பிடிப்பட்டது.

மோதிய எண்ணெய் லாரி

காங்கோ குடியரசில் எண்ணெய் லாரி காருடன் மோதிய சம்பவமொன்றில் குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவமானது மடாடி துறைமுகத்திற்கும் தலைநகர் கின்சாஷாவுக்கும் இடையே உள்ள கிசாண்டு நகரத்தில் நடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்துள்ளதாக மத்திய காங்கோ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

விசாரணை தொடக்கம்

செளதியை சேர்ந்த பத்திரிகையாளர் துருக்கியில் காணாமல் போன சம்பவத்தில் விசாரணையை தொடங்கி உள்ளது துருக்கி காவல்துறை. செளதி பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மானை தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த செய்தியாளர் ஜமால் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றப் பின் மாயமானார். அவர் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றன. இது தொடர்பான விசாரணையை துருக்கி அரசாங்கம் தொடங்கி உள்ளது.

ரஷ்ய ஆதரவு கட்சி

லாட்வியா பொதுத் தேர்தலில் ரஷ்யாவுக்கு ஆதரவான கட்சி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. லாட்வியா நாடு ரஷ்யாவுடன் தமது எல்லையைப் பகிர்ந்துக் கொள்கிறது. அந்நாட்டில் மட்டும் 2.2 மில்லியன் ரஷ்ய மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு ஆதரவான ஹார்மொனி கட்சி 19.4 சதவீத வாக்குகளை பெறுமென கணிக்கப்பட்டுள்ளது.

டிரம்பிற்கு வெற்றி

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கேவனோவை அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிறுத்தியதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சர்ச்சை டிரம்பிற்கு ஆதரவாக முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த வெள்ளியன்று அமெரிக்காவின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 50 உறுப்பினர்கள் பிரெட் கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனர்.

தனது மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் பிரெட் கேவனோ அதை நிரூபிப்பதற்கு கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை இருந்தது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்றுள்ளதன் மூலம், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் பழமைவாத கொள்கையை கொண்டவர்களின் கை ஓங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :