பிரெட் கவானா நீதிபதி நியமனத்தை எதிர்த்து போராட்டம்: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் கைது

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

நூற்றுக்கணக்கானோர் கைது

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்பால் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பிரெட் கவனா அப்பதவிக்கு நியமனம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாஷிங்டனில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரெட் கவனாவை நியமிக்க ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ள செனட் சபையில் இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

1500 ஆண்டுகளுக்கு முந்தைய வாள்

சுவீடனில் உள்ள விடோஸ்டர்ன் குளம் எனும் நீர்நிலையில் இருந்து சிறுமி ஒருவர் கண்டெடுத்த வாள் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றிருந்த அந்த சிறுமியால் கண்டெடுக்கப்பட்ட இந்த வாள் போர்வீரர்களாகவும், கடலோடிகளாகவும், வணிகர்களாகவும் வாழ்ந்த வைக்கிங்குகளின் காலத்துக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணையத் தாக்குதல் நடத்த திட்டம்?

ரஷ்யாவைச் சேர்ந்த ஏழு உளவாளிகள் , உலக போதைப்பொருள் தடுப்பு முகமை, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவில் உள்ள ஒரு அணுசக்தி நிறுவனம் உள்ளிட்ட உலகம் முழுதும் உள்ள பல்வேறு அமைப்புகள் மீது இணையவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இது மேற்கத்திய நாடுகள், உளவாளிகள் தாக்குதல் நடத்துவதாக மூர்க்கத்தனமான பயம் கொண்டுள்ளதன் வெளிப்பாடு என்று ரஷ்யா மறுத்துள்ளது.

உக்ரைன் - ஹங்கேரி மோதல்

உக்ரைன் குடிமக்களுக்கு ஹங்கேரி தங்கள் நாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்குவதைக் கண்டித்து ஹங்கேரி தூதரை உக்ரைன் வெளியேற உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் தூதர் வெளியேற்றப்படுவார் என்று ஹங்கேரி அறிவித்துள்ளது.

ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லட்சத்துக்கும் மேலான இன சிறுபான்மையினர் உக்ரைனில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஹங்கேரி கடவுச்சீட்டு வழங்கியது இரு நாடுகளுக்கும் மோதலை உண்டாக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :