மலேசிய முக்குளிப்பு வீரர்கள் 6 பேர் சுழலில் சிக்கி பலி: இளைஞரை மீட்டபோது சோகம்

பட மூலாதாரம், Anadolu Agency / getty images
மலேசியாவில் நீரில் மூழ்கியதாக கருதப்படும் 17 வயது இளைஞரை மீட்கும் முயற்சியின்போது ஆறு முக்குளிப்பு வீரர்கள் நீர்ச்சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பயன்பாட்டில் இல்லாத ஒரு சுரங்கத்தில் உண்டாகியிருந்த அந்தக் குளத்தில், புதன்கிழமையன்று தன் நண்பர்களுடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த சிறுவன் நீரில் மூழ்கியதாக கருதப்படுகிறது.
அந்த நீரில் இருந்த சுழலில் முக்குளிப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டதாலும், நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததாலும் அவர்கள் ஆறு பேரின் பாதுகாப்பு உபகாரங்களும் சேதமடைந்து கழன்று விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள சிப்பாங் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தச் சுரங்கத்தில் உள்ள நீர் நிலையில் அந்தப் பதின்வயது இளைஞரும் அவரது நண்பர்களும் மீன் பிடிக்க இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும் முன் அந்த முக்குளிப்பு வீரர்கள் அனைவரும் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிப்பாங் மாகாண காவல் துறைத் தலைவர் அப்துல் ஆசிஸ் அலி கூறியுள்ளார்.
அவர்கள் அனைவரின் பாதுகாப்பு உபகரணங்களும் ஒரே கயிறுடன் கட்டப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
சுழலின் வேகமான நீரோட்டத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டதால் அவர்களின் உபகரணங்கள் கழன்று விட்டதாக பெர்னாமா செய்தி முகமையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த ஆறு முக்குளிப்பு வீரர்களும் மீட்கப்படும் முன்பு 30 நிமிடங்களை நீருக்குள் கழித்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்தனர். அவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் ஒன்று நீரோட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் அதற்கு முந்தைய நாள் பெய்த கனமழை நீரோட்டத்தின் வேகத்தை அதிகமாக்கியிருந்தது என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இயக்குநர் மொஹமத் ஹம்தான் வாகித் நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் இதழிடம் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












