3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள்
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள்

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியில் 1946ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் 3,600க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் கசிந்த ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பான ஆய்வை கிறிஸ்துவ திருக்கோயிலே தொடங்கியது. அதன்படி, சுமார் 1,670 பாதிரியார்கள், 3,677 குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது கண்டனத்திற்குரியது என்றும், அவமானகரமான ஒன்று என்றும் தேவாலய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தலையில் முள் கரண்டி துளைத்த சிறுவனுக்கு சிகிச்சை

பட மூலாதாரம், CBS
அமெரிக்காவில் மிசூரி மாகாணத்தில் 10 வயது சிறுவன், மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இறைச்சி சுடும் முள் கரண்டி தலையில் துளைத்தது.
மரத்தின் மீது குளவி தாக்கியதால் கீழே விழுந்த சேவியர் கன்னிங்ஹம்மை முள் கரண்டி குத்தியது. அதிஷ்டவசமாக கண், மூளை, முதுகுத்தண்டு மற்றும் முக்கிய ரத்த குழாய்கள் மீது படவில்லை.
கன்சாஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன், முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் துளைத்த முள் கரண்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர். கூர்மையான அக்கம்பியை எடுக்க நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை கடினமான ஒன்றாக இருந்தது.

உலகின் பழமையான சித்திரம்

பட மூலாதாரம், Reuters
தென் ஆஃபிரிக்காவில் பாறை ஒன்றில் மனிதன் வரைந்த மிகப்பழமையான சித்திரம் வரையப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சித்திரம் 73,000 ஆண்டுகள் பழமையானதாகும். பாறை மீது சிவப்பு காவி நிறத்தில் குறுக்குக் கோடுகள் வரையப்பட்டுள்ளன.

அச்சுறுத்தும் சூறாவளி - அச்சத்தில் அமெரிக்க மாகாணங்கள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்கு முன்பு அப்பகுதியை விட்டு தப்பிக்கும் எண்ணத்தில் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களை சேர்ந்த ஏறக்குறைய 17 லட்சம் மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












