You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகளுக்கு எதிராக கிறிஸ்தவ மதகுருக்களின் பாலியல் குற்றங்கள் - போப் எச்சரிக்கை
கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட "வெறுக்கத்தக்க குற்றங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது குறித்து வெட்கப்படுவதாக போப் ஃபிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு 39 ஆண்டுகளில் முதல் முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்ஸிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மதகுருக்கள் மீதும் அதனை மறைத்தவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அயர்லாந்து பிரதமர், போப்பிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களையும் போப் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் உலக கத்தோலிக்கர்களின் சந்திப்பு நிகழும் தருணத்தில் அவரின் வருகையும் அமைந்துள்ளது.
இதற்கு முன் அவர் 1.2பில்லியன் கத்தோலிக்கர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து பேசிய அவர், "குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கொடூரமான நிகழ்வு குறித்து நான் பேசாமல் இருக்க போவதில்லை" என்று தெரிவித்தார்.
"பேராயர்கள், மதகுருக்கள், பாதிரியார்கள் போன்ற திருச்சபை ஊழியர்கள் இம்மாதிரியான வெறுக்கத்தக்க குற்றங்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்காமையால் அது நியாயமான பெரும் சீற்றத்தை எழுப்பியுள்ளது. மேலும் அது கத்தோலிக்க மக்களுக்கு வலியையும், அவமானமாத்தையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
"நானும் அதை உணர்கிறேன்" என்றார்.
மேலும் இம்மாதிரியான குற்றங்கள் தேவாலயங்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடைபெற அனுமதிக்க போவதில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக "மக்கள் இருளில், பூட்டப்பட்ட அறைகளுக்குள், அவர்கள் உதவிக்கான கதறல் கேட்கப்படாமல் போனது, புனித தந்தையே பாதிக்கப்பட்டவர்களின் வலியை கேளுங்கள் என நான் வேண்டி கொள்கிறேன்." என்று அயர்லாந்து பிரதமர் வரத்கர் தெரிவித்தார்.
அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில் அடையாளம் காணப்பட்ட 1000 சிறார்கள் 300 பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை தெரிவிக்கும் விசாரணை அறிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமர், மத தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட நெஞ்சை உலுக்கும் பேசப்படாத குற்றங்களால் மேலும் அதை மறைக்க முயன்ற தேவாலயங்கள் ஆகிய கதைகள் அயர்லாந்தில் உள்ள மக்களுக்கு பரிட்சயமானதாகிவிட்டது என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிராக புரியப்படும் குற்றங்களை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அத்தகைய குற்றங்களை புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசு மற்றும் பெரிய சமுதாயங்கள் தேவாலயங்களின் இந்த குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதால் இது ஒரு கசப்பான சேதமடைந்த பாரம்பரியத்தை உருவாக்கியதோடு பலருக்கு நீங்காத வலியும், வேதனையும் அளித்துள்ளது என்றும் அயர்லாந்து பிரதமர் வரத்கர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்