You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.
டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார்
ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கலாஷ்னிகோவ் பழங்கால கார்களை ஒத்த வடிவமைப்பை கொண்ட மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.கே. 47 என்னும் உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் துப்பாக்கியை உருவாக்கிய நிறுவனம்தான் இந்த கலாஷ்னிகோவ். 1970களில் கார் சந்தைகளில் காணப்பட்ட கார்களின் வடிவமைப்பை ஒத்து காணப்படும் சிவி-1 என்னும் இந்த மின்சார கார்கள் உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவுக்கு கடும் போட்டியளிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரகசிய சுரங்கப்பாதை
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திருந்து மெக்ஸிகோ வரை அமைக்கப்பட்டுள்ள ஒரு ரகசிய சுரங்கப்பாதையை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அரிசோனாவின் சான் லூயிஸ் பகுதியில் முன்னர் கேஎஃப்சி கடை செயல்பட்டு கொண்டிருந்த கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து சுமார் 600 அடி தூரத்திலுள்ள மெக்ஸிகோவின் சான் லூயிஸ் ரியோ கொலராடோ பகுதியிலுள்ள ஒரு வீடுவரை சுரங்கப்பாதை நீள்கிறது.
இந்த ரகசிய சுரங்கப்பாதை போதை மருந்துகளை கடத்துவதற்கு பயன்படுத்தபட்டது என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப் - ஜெஃப் செஷன்ஸ் இடையே மீண்டும் மோதல்
அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், அதிபர்டொனால்டு டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார்.
அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான்அளித்துள்ள பதிலில் ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெஃப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலாக இந்த வெளிப்படையான கண்டிப்பு செஷன்ஸ் தரப்பில் இருந்து வந்துள்ளது.
சிரியாவில் அதிகளவில் களமிறக்கப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள்
சிரியா போரில் ஈடுபட்டுள்ள தனது ராணுவத்தின் பரவல் குறித்த தகவலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை 63,000திற்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் அனுபவத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் 48,000 ராணுவ வீரர்கள் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்