You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.
பத்து மணி நேர போராட்டம்
பயணிகள் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பிரிட்டன் பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமான குரேஷியா நாட்டு கடல் பகுதியில் நடந்துள்ளது, வர்கரோலாவிலிருந்து வெனீஸ் நோக்கி நார்வே நாட்டை சேர்ந்த அந்த கப்பல் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மீட்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் கை லாங்க்ஸ்டாஃப். கப்பலின் கூரை பகுதிக்கு அந்த பெண் ஏறியதாக கூறுகிறது அந்த நார்வேஜியன் கப்பல் நிர்வாகம். மீட்கப்பட்ட பெண், "நான் கடலில் பத்து மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்." என்கிறார்.
மீண்டும் நிலநடுக்கம்
இந்தோனீசியாவின் லாம்போக் தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6.3 என்ற அளவில் இருந்திருக்கிறது. இதில் ஒருவர் மரணித்துள்ளார்.
பெலாண்டிங் நகரம் அருகே வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் பலியானார்கள்.
இத்தாலி பாலம் இடிந்த விபத்து - 43 பேர் பலி
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியாளர்களகள் இடிபாடுகளிலிருந்து மூன்று உடல்களை மீட்டனர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
கடன் பிரச்சனையை சமாளித்த கிரீஸ்
கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில் கிரீஸ் மூன்றாண்டு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக நிதி சந்தைகளில் இருந்து கடனாக நிதியை பெற கிரீஸுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிரீஸுக்கு அதன் நிதி பிரச்சனையை சமாளிக்க, ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு 61.9 பில்லியன் யூரோ நிதியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்ட குடியேறிகள்
பிரேசில் எல்லை நகரமான பகரைமாவில் வெனிசுலா நாட்டு அகதிகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதிக்கு பிரேசில் தனது படைகளை அனுப்பி உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்றதன்மை காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி பெரு மற்றும் சிலி நோக்கி செல்கிறார்கள்.
வெனிசுலா தேசத்தவர்களால் உள்ளூர் உணவக உரிமையாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வன்றை சம்பவமானது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.தங்கள் நாட்டவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென வெனிசுலா கோரியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்