முன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்

பட மூலாதாரம், AFP
ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் முன்னாள் பொது செயலரான கோஃபி அன்னான் காலமானதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலமான கோஃபி அன்னானுக்கு வயது 80.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த கோஃபி அன்னான் சனிக்கிழமையன்று உயிரிழந்ததாக அவர் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் பல ஆண்டுகள் கோஃபி அன்னான் வாழ்ந்து வந்தார்.
மனிதாபிமான பணிகள் தொடர்பாக கோஃபி அன்னான் நோபல் பரிசை பெற்றுள்ளார். 1997 முதல் 2006 வரை, இரண்டு முறைகள் அவர் ஐ.நா. பொது செயலர் பதவியில் இருந்துள்ளார்.
உலகின் முக்கிய பொறுப்பில் ஒன்றாக கருதப்படும் ஐ.நா. பொது செயலர் பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை பெற்ற கோஃபி அன்னான், ஆப்ரிக்காவில் கானா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
தனது ஐ.நா. செயலாளர் பதவிக்காலத்துக்குபின், சிரியாவில் ஐ.நா. அமைப்பின் சார்பாக சிறப்பு தூதராக அவர் செயல்பட்டார். அந்த பிராந்தியத்தில் நடந்த மோதலுக்கு சுமூக மற்றும் அமைதி தீர்வு ஏற்பட தேவையான முயற்சிகளுக்கு அன்னான் தலைமையேற்றார்.
தீவிர எச்.ஐ. வி/எய்ட்ஸ் தொற்று பரவல் மற்றும் இராக் போர் நடந்த காலகட்டத்தில் கோஃபி அன்னான் ஐ.நா. செயலரராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
'பாதிக்கப்பட்ட மக்கள் மீது இரக்கமும், அனுதாபமும் கொண்டவர்'
கோஃபி அன்னான் அறக்கட்டளை, அவரது மரணத்தை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில், ''ஓரூ சர்வதேச அரசியலாளராகவும், தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, சமாதானம் மற்றும் நியாயம் தவழும் உலகை உருவாக்க பாடுபட்ட ஒர் உலகவியலாளர்'' என்று அன்னானை விவரித்துள்ளது.
''உலகில் எங்கெல்லாம் தேவை அல்லது பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களின்பால் ஆழ்ந்த இரக்கமும், அனுதாபமும் கொண்டார் அவர், அவர்களின் துயர்துடைக்க பாடுபட்டார். எப்போதும் தன்னை முன்னிறுத்தாமல், மற்றவர்களின் நலனை முன்னிறுத்தி அன்பு மற்றும் பரிவுடன் செயல்பட்டார்'' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கோஃபி அன்னானின் மறைவுக்கு ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி உள்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












