'என் மகன் மிகவும் நல்லவன்' - ஒசாமா பின்லேடனின் தாய்

தனது மகன் மிகவும் நல்லவன், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும்போக்காளராக மாறியவர் என்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கானெம் தனது முதல் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Osama Bin Laden

பட மூலாதாரம், Getty Images

செளதி அரேபியாவில் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கலாசாரக் குழு ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, பின்லேடன் வித்தியாசமான மனிதனாக மாறினார் என்று கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

2011இல் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு முதல் முறையாக அவரது தாய் அளித்த பேட்டி இது. அவர் இப்போது சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வசித்து வருகிறார்.

அந்தக் குழுவிடம் இருந்து விலகியிருக்குமாறு தொடர்ந்து தனது மகனிடம் வற்புறுத்தியதாகவும் பின்லேடனின் தாயார் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இரட்டை மாடி கட்டடத்தை தகர்த்தது உட்பட பல தீவிரவாத செயல்களில் பின் லேடனுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால், மகன் என்ன செய்கிறான் என்பதை தன்னிடம் ஒருபோதும் தெரிவித்ததில்லை என்று கூறும் பின்லேடனின் தாய், ஏனென்றால் அவர், தன் தாயை மிகவும் நேசித்ததாக கூறினார்.

2001இல் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1999இல், ஆப்கானிஸ்தானில் பின்லேடன் வசித்துவந்தபோது அவரைச் சந்தித்ததாக அலியாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது பின்லேடன் சர்வதேச அளவில் முக்கிய தீவிரவாதியாக சந்தேகிக்கப்பட்டார். 1980களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்த சோவியத் படைகளுக்கு எதிராக போரிட ஒசாமா பின்லேடன் அங்கு சென்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :