You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கலிஃபோர்னியா காட்டுத்தீ : இரண்டு சிறுவர்கள், மூதாட்டி பலி
கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இரண்டு சிறுவர்கள் மற்றும் மூதாட்டி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமையன்று தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேரை காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஷாஸ்டா எனும் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால், "நெருப்பு சுழற்காற்று" உருவாகி மரங்களை வேரோடு சாய்ப்பதாகவும், கார்கள் அடித்து செல்லப்படுவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுவரை ஐந்து சதவீத பகுதியில் பரவியுள்ள இந்த தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த தீயால் குறைந்தது 500 கட்டுமானங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இது அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த காட்டுத்தீ 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைவிட இந்த பரப்பு பெரியதாகும்.
தனது பாட்டி மெலடி பிளட்ஸோ (70) தீயில் சிக்கி உயிரிழந்ததாக ஷெர்ரி பிளட்ஸோ கூறியுள்ளார். மேலும் எமிலி (5) மற்றும் ஜேம்ஸ் (4) ஆகிய அவரது இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளதாக மெலடி உறுதிபடுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரெட்டிங் நகரத்தில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து தப்பிக்க முயன்ற போது இவ்வாறு நடந்ததாக என்.பி.சி செய்தி தெரிவிக்கிறது.
தீயை அணைக்க 3,400 தீயணைப்பு வீரர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், வரும் வாரத்தில் வறண்ட வானிலை நிலவும் என்பதால் தீப்பிழம்பு இன்னும் மோசமாகக்கூடும் என உள்ளூர் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
தீச்சுழல்கள் வானில் காண முடிவதாக கலிஃபோர்னியாவின் வன மற்றும் பாதுகாப்புத்துறை தலைவர் கென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுமார் 37,000 குடியிருப்புவாசிகள் அப்பகுதியை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு மோசமான நிகழ்வை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. வேகமாக பரவிய தீ, புதர்களில் இருந்து அப்படியே விழுங்க வந்தது போல இருந்தது என்று அப்பகுதியை சேர்ந்த விஸ் விவரிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :