சீனாவில் அலுவலகம்: 'ஃபேஸ்புக்' திட்டம் - சீன சந்தையை கைப்பற்ற முயற்சி?
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
சீனாவில் ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images
ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாதான் சமூக ஊடகத்திற்கான மிகப்பெரிய சந்தை. ஆனால், ட்வீட்டர், ஃபேஸ்புக், யு டியூப் ஆகிய சமூக ஊடகங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.
சீனா சந்தையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என இந்நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. சீனாவில் உள்ள டெவலபர்களையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் ஊக்குவிக்கவே அங்கு அலுவலகம் திறக்க இருப்பதாக கூறுகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா, 11 குழந்தைகள் பலி

பட மூலாதாரம், Getty Images
சோதனை முயற்சியாக கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா கொடுத்ததில் 11 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். டச்சு ஆய்வு ஒன்றில் பங்கெடுத்த பெண்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டது. அதாவது கருவில் நச்சுக்கொடி பாதிக்கபட்டு இருக்கும் குழந்தைகளின் நலனுக்காகவே இந்த மருந்து வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மருந்தானது ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தி நச்சுக்கொடியை சரிப்படுத்தவே இந்த மருந்தை சோதனை முயற்சியாக வழங்கி இருக்கிறார்கள். ஆனால், இந்த மருந்தானது கருவில் இருக்கும் குழந்தைகளின் நுரையீரலை பாதித்து இருக்கலாம். என்ன நடந்தது என்று சரியாக கணிக்க இதுகுறித்த விரிவான விசாரணை தேவை என்கிறார்கள் வல்லுநர்கள்.

விவசாயிகளுக்கு உதவிய டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடக்கும் வர்த்தக யுத்தத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக 12 பில்லியன் மதிப்பிலான திட்டத்தை அறிவித்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த வர்த்தக யுத்தத்தை தொடர்ந்து அமெரிக்காவின் சோயா பீன்ஸ் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கான வரியை உயர்த்தி உள்ளன சில நாடுகள். அமெரிக்கா அரசானது விற்கப்படாத விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்காகவும், மானியம் வழங்கவும் இந்த மதிப்பிலான திட்டத்தை அறிவித்து உள்ளது.

லாவோஸ்: உடைந்த அணை

பட மூலாதாரம், Getty Images
திங்கள்கிழமையன்று லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.அணை உடைந்ததில் குறைந்தது 100 பேரை காணவில்லை என்றும், ஆயிரக்கணக்கானோர் அவர்களின் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தென் கிழக்கு லவோஸில் உள்ள அட்டபியு மாகாணத்தில், சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்களை வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளை பயன்படுத்துகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












