2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி

துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு.

எர்துவான்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மீண்டு அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ரிசெப் தாயிப் எர்துவான்.

2016ல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசர நிலையின் கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஏழு முறை அவசர நிலைக் காலம் நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மூன்று மாத காலத்துக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அவசர நிலைக் காலத்தை நீட்டிக்கவேண்டியதில்லை என்று அந்த அரசு முடிவு செய்துள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவசரநிலைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக எதிர்க் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதில் இருந்து 1.07 லட்சம் பேர் அரசுத் துறை பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; மேலும் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று அதிகாரபூர்வ புள்ளிவிரங்களும், சில அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன.

பணி நீக்கம் செய்யப்பட்ட பலர் நாடு கடத்தப்பட்ட இஸ்லாமிய மதகுரு ஃபெதுல்லா குலன் என்பவரின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. எர்துவானின் முன்னாள் கூட்டாளியான குலன் தற்போது அமெரிக்கா வசிக்கிறார்.

குலனும் அவரது ஆதரவாளர்களும் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக துருக்கி குற்றம்சாட்டுகிறது. ஆனால் அவர் அதை மறுக்கிறார்.

2016 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது ராணுவ விமானங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டுவீசின. இதில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :