உலகப் பார்வை: ஸ்பைடர் மேன்னுக்கு உருவம் கொடுத்தவர் 90-வது வயதில் மரணம்
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
'ஸ்பைடர் மேன்'-ஐ உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம்

பட மூலாதாரம், Getty Images
ஸ்பைடர்- மேன் சித்திரத்தை ஸ்டான் லீ உடன் இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் டிட்கோ, தனது 90வது வயதில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அவரது வீட்டில், அசைவற்று இருந்த ஸ்டீவ் டிட்கோ இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நீல் கெய்மன் உட்பட, ஸ்டீவ் டிட்கோவின் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 1960களில் தனது காமிக்ஸ் வரையும் தொழிலை ஆரம்பித்த ஸ்டீவ் டிட்கோ, தொடக்கத்தில் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
மார்வெல் காமிக்ஸின் ஆசிரியர் ஸ்டான் லீ, பதின்ம வயது சிறுவர்களை ஈர்க்கும் சிலந்திகளின் சக்திகளைக் கொண்ட சூப்பர் ஹீரோ என்ற ஐடியாவை கூறினார்.
இந்நிலையில், நீலம் சிவப்பு ஆடையுடன், கையில் சிலந்தி ஷூட்டருடனும் ஸ்பைடர்- மேன்னுக்கு உருவம் கொடுத்தார் ஸ்டீவ் டிட்கோ.

மைக் பாம்பியோவட கொரியா பயணம்

பட மூலாதாரம், EPA
வடகொரியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ, அந்நாட்டு அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சிங்கப்பூரில் நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை கூறியுள்ளது. வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவது போன்ற விஷயங்களை பாம்பியோ பேசவுள்ளார்.

கனடாவில் வெப்பக்காற்று: 54 பேர் பலி

பட மூலாதாரம், கனடா
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வீசிய வெப்பக்காற்றினால், 54 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 50 முதல் 85 வயதுடையவர்கள். கடந்த 10 வருடங்களில் கியூபெக் மாகாணத்தில் வீசிய வெப்பக்காற்றில், இதுவே மிகவும் மோசமானது.

பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம்

பட மூலாதாரம், Getty Images
2018 உலகக்கோப்பை கால்பந்தில் நேற்று நடந்த நாக் அவுட் சுற்றில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம், 1986க்கு பிறகு முதல் முறையாக பெல்ஜியம் அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












