உலகப் பார்வை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 17 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக 17 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு

பட மூலாதாரம், Getty Images
பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகளின் குடும்பங்களை பிரிக்கும் முடிவை எடுத்த டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக 17 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. டிரம்பின் இம்முடிவை 'கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது' எனவும் அவை விமர்சித்துள்ளன. வாஷிங்டன், நியூயார்க் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட 17 மாகாணங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

அகதிகளை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சம்மதம்

பட மூலாதாரம், EPA
மத்திய தரைக்கடலில் ஒரு மீட்பு கப்பலில் இருக்கும் 230 அகதிகளை தங்களது நாடுகளில் ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் உள்ளிட்ட 6 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.

ரோஹிஞ்சா மக்கள் மீது தாக்குதல்: ஆதாரம் சிக்கியது

பட மூலாதாரம், Getty Images
ரோஹிஞ்சா போராளிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ரோஹிஞ்சா மக்கள் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயாரனது குறித்த ஆதாரம் கிடைத்துள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷ்னல் கூறியுள்ளது. ராணுவத்தின் நடவடிக்கையால், பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா மக்கள் மியான்மரை விட்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

20 வருட மோதல் முடிவுக்கு வந்தது

பட மூலாதாரம், AFP
எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் ராணுவப் பதற்றத்தை நீக்குவதற்காக, உயர்மட்ட எரித்திரியா குழுவினர் எத்தியோப்பியா செல்ல உள்ளனர்.
30 வருட மோதலுக்குப் பிறகு, 1993-ம் ஆண்டு எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியா பிரிந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த எல்லைப் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
கிட்டதட்ட 20 ஆண்டுகளாக இவ்விரு நாடுகள் இடையே தூதரக உறவுகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












