இந்தியா - ரஷ்யா நட்புறவு கடந்த காலமாகிவிட்டதா?

பட மூலாதாரம், KREMLIN.RU
- எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
- பதவி, பிபிசி, மாஸ்கோ
இனிய மாலைப் பொழுது, நாங்கள் மாஸ்கோ நகரின் அழகிய அடுக்கு மாடி வீட்டில தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறோம். இந்த வீடு இப்போது ரஷ்யாவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அபிஷேக் சிங்கிற்கு சொந்தமானது.
அவர் மனைவி சாஷா ரஷ்யர். அவர்கள் மகனுக்கு 6 மாதம் ஆகிறது. இருவரும் உக்ரைனில் காதலித்து உத்தரபிரதேசத்தில் அபிஷேக்கின் பெற்றோர் வசிக்கும் ஹார்டோயில் திருமணம் ஆனது.
தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த அபிஷேக், இந்தியர்கள் ரஷ்யா மீது நீண்டகாலமாக ஆர்வம் கொண்டவர்கள் என்று நம்புகிறார். ஆனால் இதில் ஒரே ஒரு பிரச்சினை தான் உள்ளது.
"எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் ஒரே ஒரு பிரச்சினை தான் இருக்கிறது. உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இங்கே அழைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இங்கே வருவதற்கு விசாவிற்கான விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவை. ஒருவர் தன் மொத்த திட்டத்தையும் தெரிவிக்க வேண்டும். ஓட்டல் அறையை முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை முன்கூட்டியே அனுப்ப வேண்டும். ஆனால் அதே நேரம், ரஷ்யர்கள் இந்தியா வரவேண்டுமானால் விசா வாங்குவது மிகவும் எளிதானது". என்கிறார்.
இன்றும் இந்தியாவின் தளத்தகை சார்பு ரஷ்யாவிடம் தான் உள்ளது
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான நட்பு நீண்ட கால நட்பாகும். சுதந்திரம் பெற்றது முதலே ரஷ்யா இந்தியாவின் பொருளாதார மற்றும் போர்த்திறன் சார்ந்த உதவிக்கு எப்போதுமே முன்வந்துள்ளது.
இந்தியாவின் உரத் தொழிற்சாலை முதல் டாங்கிகள் தொழிற்சாலை வரை, மிக் ரக விமானங்கள் அல்லது சுகோய் விமானங்கள் என இந்திய இராணுவத்திற்கு ரஷ்யாவின் உதவி இருந்து வந்துள்ளது. இன்றும், இந்தியாவின் ஆயுதத் தொழிற்துறை ரஷ்யாவின் ஆதரவை பெரிதும் நம்பி உள்ளது.

இதைத்தவிர இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான நட்பு நிலவிய காலத்தில் ரஷ்யாவில் குடியேறிய ஏராளமான இந்தியர்கள், தங்களுக்கு என தனி இடத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சம்மி கோட்வானி 1990ல் இங்கே வந்த போது, நிலைமை மிகவும் சிரமம் மக்கள் வேறு இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். சோவியத் யூனியன் இருந்த இடத்தில் புதிய ரஷ்யா பிறந்திருந்தது, ஆனால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருந்தது.ஷ்
சம்மி கோட்வானியின் டெய்லரிங் நிறுவனம் இப்போது ஐரோப்பா முழுவதும் பரவி உள்ளது.
சம்மி கூறுகிறார், " சோவியத் யூனியன் காலத்தில் நமது வர்த்தகர்கள் நிறைய சம்பாதிது விட்டு சென்று விட்டார்கள். இப்போது இந்த நாடு பணம் பண்ணும் நாடு அல்ல. நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. வியாபாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் இன்றைக்கும் நீங்கள் நீண்டகாலத்திட்டத்துடன் வந்தால் , இதை விட சிறந்த நாட்டை நீங்கள் காண முடியாது."
சம்மி கோட்வானி போன்றவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் ரஷ்யாவில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர். இன்றைய தேதியில் இவர் நிறுவனத்தில் ரஷ்யர்களும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இன்னொரு உதாரணம் சென்னையைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன்.
ரஷ்ய குடியுரிமை பெறுவது மிகவும் சிரமம்
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், காசி ரஷ்யாவிற்கு படிப்பதற்காக வந்தார். இன்றைக்கு அவர் 5 பெரிய உணவகங்களுக்குச் சொந்தக்காரர். மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் இவை உள்ளன.
காசி சொல்கிறார், " ரஷ்யாவில் இந்தியர்கள் மிகச்சிலரே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். என் உணவகத்தில் பல ரஷ்யர்கள் பணிபுரிகிறார்கள். அதனுடன் கூடுதலாக, எங்களுக்கு என கோட்டா உள்ளது. அதை வைத்து நாங்கள் ஆண்டு தோறும் இங்கே பணிபுரிய இந்தியர்களை அழைக்கிறோம்."
ஆனால் இது போன்ற உதாரணங்கள் ரஷ்யாவில் அதிகம் இல்லை. உண்மையில் தற்போதைய ரஷ்யாவில் 14000 இந்திய வம்சாவழியினரே உள்ளனர்.
இங்கு பயிலும் 5000 மாணவர்கள் எண்ணிக்கையை நீக்கி விட்டால் இந்த எண்ணிக்கை மேலும் சரியும்.
ரஷ்யாவில் பல இந்தியர்கள் வசித்தாலும் அவர்கள் ரஷ்யர்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் மூலம் குடியுரிமை எளிதில் கிடைக்கிறது. இல்லையெனில் ரஷ்யக் குடியுரிமை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

ரஷ்யாவில் குடியேறிய இந்திய தொழிலதிபர் ஒருவர் என்னிடம் கூறினார், " ரஷ்யாவில், சுமார் 500 தொழிலதிபர்கள் பல்வேறு நகரங்களில் வசிக்கிறார்கள். இவர்களில் 200 பேர் மாஸ்கோவில் மட்டுமே குடியேறியுள்ளனர். இவர்களில் பாதிபேரின் மனைவியர் ரஷ்யர்கள் என்றால் நம்புவீர்களா?
ரஷ்யாவில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் தேயிலை, காபி, மருந்துகள், சிறுதானியங்கள் மற்றும் நறுமணப்பொருள்கள், தோல்பொருள்கள் மற்றம் ஆடைகள் போன்ற வியாபாரத்தில் உள்ளனர்.
சமீப வருடங்களில் வைர நகை வியாபாரம் அதிகரித்து உள்ளது. ஆனால் பெல்ஜியம் போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
"இந்தியா-ரஷ்யா உறவு நாம் முன்பு கேள்விப்பட்டது போல் இல்லை."
குஜராத்தின் தர்மேந்திர ராவல் 1998ல் ரஷ்யா வந்தார். இங்கு 10 வருடங்கள் வசித்த பின்னர், அவர் ரஷ்யாவில் வசித்த நாட்களை எண்ணுவதை நிறுத்திவிட்டதாக சொல்கிறார்.
மருந்து வணிகரான தர்மேந்திரா மேலும் கூறுகையில், " பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா -ரஷ்யா இடையேயான உறவுகள் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. இந்தியாவிற்கு வருங்காலத்தில் சிறந்த உதவும் நாடாக ரஷ்யா திகழக்கூடும் என்ற போதும் இதுதான் நிலை."
இன்றைய நிதர்சமான உண்மை என்னவெனில், இரு நாடுகளும் தங்கள் பரஸ்பரம் நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு இருந்த போதும் தங்களுக்கென புதிய நண்பர்களை தேடிக்கொண்டன.
இந்திய பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளில் வலுவடைந்தது, அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளது. ரஷ்யாவும் தனது நேசக்கரத்தை ஐரோப்பிய நாடுகளுடன் நீட்டியுள்ளது. ஒரு வேளை இதன் காரணமாகத்தான் இருநாடுகளுக்கும் இடையேயான வாணிபம் மிகவும் குறைந்துள்ளது.

உதாரணத்திற்கு, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா இடையேயான வாணிபம் ஆறு முதல் ஏழு பில்லியன் டாலர்களாக அப்படியே உள்ளது.
அமெரிக்காவுடனான வாணிபத்துடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவுடனான வாணிபம் சொற்பம். ஏனெனில் 2017ல் இந்தியா- அமெரிக்கா இடையேயான வாணிபத்தின் அளவு சுமார் 67 பில்லியன் டாலர்கள்.
சீன நிறுவனங்கள் தங்களுக்கென வலுவான பாதையை அமைத்துள்ளன
மாஸ்கோவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் குமார் வேலங்கி மாம்பள வியாபாரம் செய்து வருகிறார். வருங்காலத்தின் மீது சந்தேகத்துடனேயே நம்பிக்கை தெரிவிக்கிறார்.
குமார் கூறுகிறார்,"முட்டுக்கட்டை என்று பார்த்தால் குறித்த நேரத்தில் பணம் செலுத்தும் விவகாரத்தில் வருகிறது. ரஷ்ய சந்தை குறித்து பல பிரபல இந்திய நிறுவனங்கள் அவ்வளவு வசதியாக கருதவில்லை. இங்கே வருவது குறித்து இந்திய நிறுவனங்கள் மிகவும் அபாயகரமானதாகவே கருதுகின்றன, இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டுமானால், இந்தியாவின் முன்னணி 100 நிறுவனங்கள் இங்கே வந்து தங்கள் அலுவலகங்களை திறந்து இங்கே சீன நிறவனங்கள் ஏற்கனவே செய்து வருவது போல் வாணிபம் செய்ய வேண்டும்.
ரஷ்யாவில் 10 நாள் வசித்த பின்னர் நான் உணர்ந்த விஷயம், சீன நிறுவனங்கள் மிகவும் ஆழமாக வேரூன்றி விட்டன என்பது தான்.
இந்த கோணத்தில் பார்த்தால், இந்திய நிறுவனங்கள் அல்லது வர்த்தகம் மாஸ்கோவிலோ அல்லது ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலோ இல்லவே இல்லை எனலாம.
இந்தியா-ரஷ்யா இடையேயான உறவுகள் கலாசார அடிப்படையிலானவை
இருப்பினும் கடந்த சில வருடங்களாக இந்தியா ரஷ்யா இடையே ஏராளமான ஒருமித்தக் கருத்துக்களும் புதிய ஒப்பந்தங்களும் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் பல கோரிக்கைகளை ரஷ்யா ஆதரித்துள்ளது. குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம்.

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவிற்கு அரசு முறை மற்றும் சாதாரண விஜயங்களுக்கு வலியுறுத்தியுள்ளார். "இரு நாடுகளும் நட்புறவிற்கு புதிய உதாரணமாக திகழும்" என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் புதிய ஒப்பந்தங்கள் ஆயுதக் கொள்முதல் தொடர்பாக கையெழுத்தாகி உள்ளன.
ஆனாலும் பனிப்போர்க் காலத்தின் போது இருந்த அளவு வலுவான உறவு உள்ளதா என்று சொல்வது சிரமம்.
மாஸ்கோவில் உள்ள மூத்த ரஷ்ய பத்திரிகையாளர் ஆண்ட்ரே சிறிய ஆனால் முக்கியமான விஷயம் பற்றி சொன்னார்.
"இந்தியா ரஷ்யா இடையேயான உறவுகள் கலாசார ரீதியானவை. இவை ஒருபோதும் சமமாக இருந்ததில்லை. எனவே உறவு முறை எப்படி இருந்தாலும், சிறப்பாகவே இருக்கிறது."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












