You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப்பை விமர்சிக்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்
மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கையை, முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி லாரா புஷ் விமர்சித்துள்ளார்.
கடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தது அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர் என்ற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்படுபவர்களுடன் வரும் குழந்தைகள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்படுகின்றனர்.
ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படும் இந்த குழந்தைகள், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவை துறையின் பராமரிப்பில் இருக்கும் வெகுஜன தடுப்பு மையங்கள் அல்லது பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது கொடூரமானது, ஒழுக்கக்கேடானது இதயத்தை பிளக்கும் செயல் என்று அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி லாரா புஷ் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது டெக்ஸாஸில் வசித்துவரும் லாரா புஷ், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளில் சகிப்புத்தன்மை இல்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
முன்னதாக, "குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளைக் காண்பதை வெறுக்கிறேன்" என்று டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் ஆச்சரியம் அளிக்கும் அறிக்கையை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
குடியேற்ற சீர்திருத்தத்தில் தீர்வு ஏற்படுத்த இரு தரப்பினரும் பணியாற்றவேண்டும் என்ற தனது கணவரின் அழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இந்த கொள்கையை அறிமுகப்படுத்தியது டிரம்ப்பின் அட்டர்னி ஜெனரல் என்பதையும், நாடாளுமன்றத்தால் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.
அடைக்கலம் கோரி அமெரிக்காவிற்குள் அதிகாரபூர்வமாக நுழைவு வாயில்களின் வெளிப்புறம் இருந்து எல்லை கடந்து வர முயலும் வயதுக்கு வந்தோர், தடுப்பு காவலில் வைக்கப்படுகின்றனர். மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவது தொடர்பான வழக்குகளும் அவர்கள் மீது தொடரப்படுகிறது.
இதன் விளைவாக, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தடுப்பு மையங்களாக மாற்றியமைக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
லாரா புஷ் என்ன சொன்னார்?
"நமது அரசு மாற்றியமைக்கப்பட்ட பெட்டி கடைகளில் குழந்தைகளை அடைத்து வைக்கக்கூடாது. மேலும், பாலைவனத்தின் கூடார நகரங்களில் அவர்களை தங்க வைக்க திட்டமிடக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.
"அமெரிக்க வரலாற்றில் மிகவும் அவமானகரமான நிகழ்வுகளில் ஒன்றாகக் இது கருதப்படும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய அமெரிக்க தற்காப்பு முகாம்களை இவை நினைவூட்டுகின்றன," என்றும் லாரா புஷ் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்