நரேந்திர மோதியின் இந்தோனீசியா பயணத்தால் சீனா பதற்றமடைந்துள்ளதா?

இந்தியா
படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதி மற்றும் இந்தோனீசியா அதிபர் ஜோக்கோ விடோடோ

தற்போதைய சூழ்நிலையில், வணிகமோ அல்லது செயல்திட்டமோ.. இந்தியாவும், சீனாவும் ஒருவரின் ஒருவர் அசைவுகள் மீது கண் வைத்துள்ளனர்.

சமீபத்தில் இந்தோனீசியா தனது சபாங் தீவில், இந்தியாவிற்குப் பொருளாதார மற்றும் ராணுவ அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தத் தீவு சுமத்ராவின் வடக்குப் பகுதியில் உள்ளது.

சபாங் துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்தியா முதலீடு செய்யவுள்ளதாகவும், மேலும் ஒரு மருத்துவமனையை இந்தியா கட்ட உள்ளதாகவும் இந்தோனீசிய அமைச்சர் லுஹுட் பன்ஜாட்டான் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி வந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்தோனீசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கிளம்பினார்.

ஆனால் இந்த மூன்று நாடுகளில், முழு கவனமும் இந்தோனீசியா மீதுதான் உள்ளது. இரு நாடுகள் இடையே சமீபத்தில் போடப்பட்ட சபாங் ஒப்பந்தமே இதற்கு காரணம்.

''இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அழைப்பை ஒட்டி, மே 29-ம் தேதி நான் ஜகார்த்தாவில் இருப்பேன். பிரதமரான பிறகு இதுவே எனது முதல் பயணம். 30-ம் தேதியன்று, அன்று விடோடோவுடனான பேச்சுவார்த்தைக்காக உற்சாகமாக இருக்கிறேன்'' என நரேந்திர மோதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

இந்தியா

இந்தோனீசியாவின் அணுகுமுறை மாறிவிட்டது

இந்தியா மற்றும் சீனா குறித்த இந்தோனீசியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இந்தோனீசியா சமீபத்தில் வரை இந்தியாவுடன் ஒரு செயல்திட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டியது, ஆனால் இப்போது அது மாறியுள்ளது.

இந்தியாவிற்கும் இந்தோனீசியாவிற்கும் இடையேயான வளர்ந்து வரும் உறவு சீனாவுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் இதைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரையை எழுதியுள்ளது.

''இந்தோனீசியாவின் சபாங் தீவில், இந்தியாவும் இந்தோனீசியாவும் ஒரு செயல்திட்ட முதலீடு குறித்து கவனம் செலுத்துகின்றன. நரேந்திர மோதியின் சமீபத்திய இந்தோனீசிய பயணம் அதையே குறிக்கிறது'' என அப்பத்திரிக்கை எழுதியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சபாங் தீவில் இந்தியா முதலீடு செய்ய, இந்தோனீசியா அனுமதி வழங்கியது.

இந்தியா

''இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இந்தோனீசிய கப்பல் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பன்ஜெய்தான்,' 40 அடி ஆழமுள்ள சபாங் துறைமுகம், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களையும் கையாளும் திறன் கொண்டது' என கூறியுள்ளார்'' எனவும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா என்ன கூறுகிறது?

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவின் துறைமுக முதலீட்டைப் பற்றி சீனா நேர்மறையான அணுகுமுறையை வைத்துள்ளது. ஏனேனில் இது பிராந்திய பொருளாதார மேம்படுத்தும். ஆனால், சபாங் தீவில் இந்தியா மற்றும் இந்தோனீசியா இடையே சாத்தியமான ராணுவ ஒத்துழைப்பு ஏற்பட்டால் சீனா கண் மூடி இருக்காது எனவும் அப்பத்திரிகை எழுதியுள்ளது.

சபாங் தீவில் இந்தியா ராணுவ செயல்திட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளது. சீனாவுடன் இந்தியா செயல்திட்டத்தில் போட்டியிடுவது தவறானது. இதனால், இறுதியில் இந்தியா தனது சொந்த விரல்களை எரித்துக்கொள்ளும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், வெளிநாட்டு முதலீட்டில் இந்தியா சீனாவை போட்டியாளராகக் கருதுகிறது. ஆனால், இது இந்தியாவை எங்கும் கொண்டு செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா

சீனா இந்தியாவை மிரட்டுகிறதா?

''ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான சீன அரசு நிறுவனத்திற்கு 99 ஆண்டு காலத்திற்கு, இலங்கைக் குத்தகைக்கு விட்டுள்ளது. இதனால், இந்திய பெருங்கடலில் வர்த்தகம் மேம்படச் சீனா உதவியுள்ளது. இந்திய பெருங்கடலின் அருகில் உள்ள நிறையத் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து, ஆசியா ஐரோப்பியாவை இணைக்கும் புதிய சர்வதேச வர்த்தக பாதைகளை சீனா திறந்துள்ளது. ஆனால், இதில் எந்த துறைமுகமும் ராணுவத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை''குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

''சீனா உடனான ராணுவ போட்டியினை இந்தியா விரும்பவில்லை என நாங்கள் நம்புகிறோம். இந்தோனீசியாவில் இந்தியாவின் இருப்பு குறித்து, புது தில்லியின் நடவடிக்கைகள் சோதிக்கப்படும். சீனாவுடன் இந்தியாவின் விரோதப்போக்கு தொடர்ந்தாலோ, இந்தச் சோதனையில் இந்தியா வெற்றி பெற தவறினாலோ பேரழிவு விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.

''மோதியின் இந்தோனீசிய பயணம் குறித்து சீனா கவனம் செலுத்தும். இரு நாடுகளும், தங்களது ராணுவ ஒத்துழைப்பு பற்றி தெளிவுபடுத்தும் என நம்புகிறோம்'' என முடிவாகக் கூறியுள்ளது குளோபல் டைம்ஸ்

(இந்த கட்டுரை பிபிசி இந்தி சேவை பிரிவால் தயாரிக்கப்பட்டது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: