உலகப் பார்வை: சௌதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது

பட மூலாதாரம், Reuters
செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக செளதி அரசு செய்தி தொலைக்காட்சி கூறியுள்ளது.

கியூபா: விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கு மேற்பட்டோர் பலி

பட மூலாதாரம், EPA
கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கு மேற்பட்டோர் பலியாயினர் என்று கியூபாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
விபத்திலிருந்து தப்பித்த மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான கிரான்மா செய்தி வெளியிட்டுள்ளது.
விமானத்தில் 110 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா வன்முறை குறித்து ஐநா விசாரணை

பட மூலாதாரம், EPA
இஸ்ரேலிலுள்ள காசா எல்லைப்பகுதியில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு வாக்களித்துள்ளது.
ஆனால், இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் வாக்களித்துள்ளன. முன்னதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன், திங்கட்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாலத்தீனர்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் தொடுத்தது முற்றிலும் தவறான ஒன்று என்று தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 58 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃ ப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்

பட மூலாதாரம், AFP
ஆஃ ப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், ஐம்பது பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜலாலாபாத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நள்ளிரவு நேரத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்துக்கொண்டு இருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மைதானத்திற்கு உள்ளே இரண்டு தற்கொலைப்படை தாக்குதலும், அதன் வெளியே, மேலும் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

பட மூலாதாரம், துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் 17 வயதான டிமிட்ரியோஸ் பாகார்ட்ஸ் என்ற மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 10 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த மாகாணத்தின் ஆளுநர் கூறியுள்ளார்.
கொலை குற்றச்சாட்டுக்காக அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களின் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என போலீஸார் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












