மலேசியா: பதவியேற்றவுடன் வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கும் புதிய பிரதமர்

பட மூலாதாரம், Getty Images
கடந்த அரசு அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய போலிச் செய்திக்கெதிரான சட்டத்தை மறுவரையரை செய்யவுள்ளதாக மலேசியாவின் புதிய பிரதமர் மகாதீர் மொஹமத் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடந்த தேர்தலுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட போலிச் செய்திகள் குறித்த சட்டமானது, பேச்சு சுதந்திரத்தை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளதாக அந்நாட்டில் பரவலான விமர்சனம் எழுந்தது.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த சட்டத்தின் கீழ் இலக்கான மகாதீர், அப்போது அச்சட்டத்தை தான்முற்றிலும் ஒழித்துக்கட்டுவதற்கு உத்தரவாதம் அளித்தார்.
ஆனால், பேச்சுரிமைக்கும், பத்திரிகை சுதந்திரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட "எல்லை" இருக்க வேண்டியது அவசியம் என்று தற்போது அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், நஜிப் ரசாக் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோருவதாக ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK/NAJIBRAZAK
மலேசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா நஜிப் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தை ஆதரிக்கும் வகையிலான வாசகங்களை தனது விமானத்தில் பதிவிட்டிருந்தது.
என்ன சொல்கிறது போலிச் செய்திக்கெதிரான சட்டம்?
மலேசியாவின் சர்ச்சைக்குரிய போலிச் செய்தி தடுப்பு சட்டத்தின்படி, தவறான தகவலை ஒருவர் வெளியிட்டால் அவருக்கு ஆறு வருடங்கள் வரை சிறைத்தண்டனையோ அல்லது 5,00,000 மலேசிய ரிங்கெட்டோ அபராதமாக விதிக்கப்படும்.
பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்த சட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பை தளர்த்துவதற்கான அதிகாரிகளின் முயற்சியே இது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், EPA
இந்த சட்டத்தின் கீழ் டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும்தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தனது பக்கட்டன் ஹரப்பன் கூட்டணி இந்த தேர்தலில் வெல்லும் பட்சத்தில் போலிச் செய்திக்கெதிரான இந்த சட்டமும், "அடக்குமுறைக்கு" வழிவகுக்கும் ஏனைய சட்டங்களும் "ஒழிக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்" என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாதீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய மலேசியாவின் புதிய பிரதமர், "போலிச் செய்தியையும், உண்மையான செய்தியையும் மக்களும், ஊடகங்களும் வேறுபடுத்தி பார்க்கும் வகையில் போலிச் செய்தி தடுப்பு சட்டத்துக்கான புதிய விளக்கம் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












