உலகப் பார்வை: செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா

பட மூலாதாரம், NASA/JPL
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிறது.
ஹெலிகாப்டரை சிறிய அளவில் வடிவமைத்து, அதன் எடையை 1.8 கிலோவாக குறைக்க வடிவமைப்பாளர்கள் குழு 4 ஆண்டுகள் உழைத்தது.
பூமியை விட 100 மடங்கு மெலிதான செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பறக்க உகந்ததாக இந்த ஹெலிகாப்டரை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நமது எதிர்கால அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவ போகிறது என்று நாசா நிர்வாகி ஜிம் கூறியுள்ளார்.
ட்ரோனுக்கு பதிலாக பறக்கவிருக்கும் சிறிய ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை காப்பாற்ற நடவடிக்கை

பட மூலாதாரம், AFP
இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்ததையடுத்து, ஒப்பந்தத்தை காப்பாற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இரான் மீது மீண்டும் தடைகள் கொண்டு வரவும் அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து, ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்கல், ரஷிய அதிபர் புதினுடனும், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அதிபர் டிரம்பிடமும் பேசியுள்ளனர்.
இரானுடன் தொழில் தொடர்பு வைத்த நிறுவனங்கள் மீது அமெரிக்க தடை விதித்ததற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

வட கொரியாவின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அமெரிக்கா உதவும்

பட மூலாதாரம், EPA
வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க அமெரிக்கா உதவும் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தென் கொரிய நண்பர்களுடன் இணைந்து வட கொரியாவுடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக பாம்பியோ தெரிவித்துள்ளார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்ததாகவும், வட கொரியாவில் இருந்து திரும்பிய பாம்பியோ கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பும், கிம் ஜாங்-உன்னும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
மேலும் படிக்க:வட கொரியாவுக்கு பொருளாதார உதவிகளை செய்ய தயார்: அமெரிக்கா

சட்டவிரோதமாக கட்டப்பட்ட அணை

பட மூலாதாரம், AFP
கென்யாவில் தனியார் அணை உடைந்து 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த அணையானது சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அந்நாட்டின் நீர்வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை என்று நீர்வள மேலாண்மை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து வடமேற்கே சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலாய் நகரின் அருகே உள்ள படேல் அணை புதன்கிழமை நள்ளிரவு உடைந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












