மலேசிய தேர்தல்: 92 வயது குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர்

இன்று (புதன்கிழமை) நடக்க உள்ள மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் பல மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தனது முன்னாள் அரசியல் குருவான 92 வயதான எதிர்க்கட்சி தலைவர் மகாதிர் முகமதை எதிர்கொள்கிறார். மலேசியா சுதந்திரமடைந்தது முதல் நடந்த தேர்தல்களில் இத்தேர்தல் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

வட கொரியா சென்றுள்ள அமெரிக்க செயலர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையினான சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ வட கொரியா சென்றுள்ளார். சந்திப்புக்கான இடமும், நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தனது நோக்கம் என மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

காங்கோவில் மீண்டும் இபோலா வைரஸ் அச்சுறுத்தல்

தங்கள் நாட்டின் வடமேற்கு பகுதியில் மீண்டும் ஒரு இபோலா வைரஸ் பாதிப்பு பரவல் ஏற்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயக குடியரசு அரசு அறிவித்துள்ளது. பிகாரோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள 17 உயிரிழப்புகள் தொடர்பாக நடந்த மருத்துவ பரிசோதனைகளில் இரண்டு மரணங்கள் எபோலா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவை நோக்கி பாய்ந்த இஸ்ரேல் ஏவுகணைகள்

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் அருகே உள்ள கிஸ்வேயை நோக்கி ஏவப்பட்ட இரண்டு இஸ்ரேல் ஏவுகணைகளை சிரியாவின் வான்வழி படை இடைமறித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் அரசு ஆதரவு போராளிகள் 9 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: