அமெரிக்கப் படைகள் தொடர்ந்து இருக்கும்: தென் கொரியா
கொரியப் போரை முறைப்படி முடிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அமெரிக்க படைகள் தனது நாட்டில் தொடர்ந்து இருக்கும் என தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
1953-ம் ஆண்டு கொரியப் போரில் சண்டைகள் முடிந்தபிறகு எட்டப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் 29 ஆயிரம் அமெரிக்க படையினர் தென் கொரியாவில் இருக்கிறார்கள்.
கொரிய தீபகற்பத்தில் இருந்து இந்தப் படைகள் வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தனது அணு ஆயுதங்களைத் துறக்கத் தயாராக இருப்பதாக வடகொரியா கூறியது.
ஆனால் தென் கொரிய அரசு செய்திதொடர்பாளர் பேசுகையில், ''சமாதான ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதற்கும் அமெரிக்கப் படைகள் இருப்பதற்கும் தொடர்பு ஏதுமில்லை'' என தெரிவித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் சார்பாக பேசிய கிம் இயூ-க்யீஓம் ''அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருப்பது தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டணி தொடர்பான ஒரு விவகாரம்'' என தெரிவித்துள்ளார்.
கொரியத் தலைவர்கள் இடையே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பில் கொரியப் போரை முறைப்படி முடித்து அமைதியை நிலைநாட்டுவது மற்றும் கொரிய தீபகற்பத்தை அணு சக்தியற்ற இடமாக மாற்றுவதற்கான பணியில் ஈடுபடுவது ஆகியவை இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டன.
தாற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 1953-ல் போர் நிறுத்தப்பட்டது. ஆனால், போரை இருநாடுகளும் முறையாக முடிவுக்கு கொண்டுவரவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டுமெனில் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் தொடர்ந்து நீடிப்பதை நியாயப்படுத்துவது கடினமாக இருக்கும் என அதிபர் மூனின் ஆலோசகர் ஒருவர் செய்தித்தாள் கட்டுரை ஒன்றில் எழுதியதற்குப் பதில் அளிக்கும் வகையில் செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார்.
பாதுகாப்பு உத்தரவாதம்
கடந்த காலத்தில் அமெரிக்க படைகள் அத்தீபகற்பத்தில் இருப்பதையும், தென் கொரியாவோடு அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதையும் கண்டு ஆத்திரம் அடைந்தது வடகொரியா. ஆனால், இது குறித்து பன்முன்ஞ்சோம் உச்சிமாநாட்டின் முடிவில் எட்டப்பட்ட அறிக்கையில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு

கொரிய உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
- அணுசக்தியற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் செயலில் அர்ப்பணித்துக்கொள்ளுதல்.
- ராணுவமயமற்ற மண்டலத்தை அமைதி மண்டலமாக மாற்றுதல் மேலும் பிரசார ஒலிபரப்பை நிறுத்துதல்.
- இம்மண்டலத்தில் ஆயுதங்களைக் குறைத்து ராணுவ பதற்றத்தை குறைத்தல்.
- போரால் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைய ஏற்பாடு செய்தல்.
- எல்லையில் உள்ள சாலைகளை இணைத்து ரயில்வேயை நவீனமயமாக்குதல்.
- இந்த ஆண்டு நடக்கும் ஆசிய போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளில் தொடர்ந்து இரு நாடுகளும் கூட்டாகப் பங்கேற்றல்.

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தனது நாட்டிற்கு அணு ஆயுதங்களின் தேவை இல்லை என வடகொரியத் தலைவர் தென்கொரியாவிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
வரும் வாரங்களில், கிம் அதிபர் டிரம்புடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றொரு சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். நிகழ்ச்சி நிரல், தேதி, இடம் ஆகியவை இன்னும் முடிவாகவில்லை.
அமெரிக்கா ஏன் தென்கொரியாவில் படையை நிறுத்துவதற்காக அதிகம் செலவிடுகிறது என முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார் அதிபர் டிரம்ப்.
பிற செய்திகள்:
- டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம்
- நீதிபதி லோயா மரணம்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
- கத்துவா பாலியல் வன்கொடுமை: காஷ்மீர் அரசியலில் யாருக்கு பின்னடைவு?
- எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம்
- #தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












