உலகப் பார்வை: உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றி

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

11 மருத்துவர்கள், சுமார் 14 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செய்த இந்த அறுவை சிகிச்சைதான் உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும்.

கூகுளின் தாய் நிறுவனத்தின் வருமானம் 73% உயர்வு

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் வருமானம் 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 73 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 5.4 பில்லியன் டாலர்களாக இருந்த ஆல்பாபெட்டின் வருமானம், இந்தாண்டு துறைசார்ந்த வல்லுனர்களின் கணிப்பையும் மீறி 9.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் சேவை பராமரிப்பு மற்றும் அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளால் கூகுளின் வருமானம் இந்தாண்டு பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை நிறுத்துகிறது பின்லாந்து

உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த நாட்டு மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் பின்லாந்து அரசின் சோதனை ரீதியிலான திட்டத்தை நிறுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

பின்லாந்தில் வேலைவாய்ப்பற்றவர்களாக அடையாளம் காணப்பட்ட 2,000 பேர் மாதத்திற்கு தலா 685 டாலர்களை குறைந்தபட்ச ஊதியமாக பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

தனது மனைவி பார்பராவின் இறுதி சடங்குகள் முடிந்த அடுத்த நாளே அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபள்யூ புஷ் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஷுக்கு ஏற்பட்ட தொற்று அவரது ரத்தத்தில் கலந்ததன் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப செய்தித்தொடர்பாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: