You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஹ்ரைன்: 8,000 கோடி பீப்பாய் அளவுள்ள எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு
தனது நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல் ஒன்றில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு நீலக்கீல் எண்ணெய் (ஷேல் எண்ணெய்) உள்ளது என பஹ்ரைன் தெரிவித்துள்ளது. வளைகுடா தீவு நாடான பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட விட இது பல மடங்கு அதிகமாகும்.
பஹ்ரைனின் மேற்கு கடற்கரையில் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில் 28 முதல் 56 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை வாயு இருக்கலாம் என இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் மதிப்பிட்டுள்ளன.
எண்ணெய் வள அமைச்சர் ஷேய்க் மொஹம்மத் பின் கலீஃபா கூறுகையில் ''அந்த வயலில் இருந்து எவ்வளவு அளவுக்கு எண்ணெயை பிரித்தெடுக்க முடியும் என இதுவரை தெரியவில்லை'' என்றார்.
ஆனால் இவை பஹ்ரைனை உலக சந்தையில் எண்ணெய் வளத்தில் செல்வாக்குள்ள நாடாக மாற்றும்.
பஹ்ரைன் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி அதிகாரிகள் இந்த எண்ணெய் வயலில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுப்பது ஐந்து ஆண்டுகளுக்குள் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
நீண்ட கால உற்பத்தி
இந்த கண்டுபிடிப்புக்கு முன்னதாக பஹ்ரைன் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளத்தை பொருத்தவரையில், சுமார் 12.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயையும், 9,200 கோடி கன மீட்டர் இயற்கை வாயுவையும் மட்டுமே கொண்டிருந்தது.
ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் பக்கத்து நாடான மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கிய சவூதி அரேபியா 2 லட்சத்து 66 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் வளத்தை கொண்டிருந்தது.
கடந்த சில வருடங்களில், குறைவான எண்ணெய் வளம் மற்றும் எண்ணெய் விலையின் வீழ்ச்சி போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்தை நிதி சேவைகள் மற்றும் சுற்றுலா போன்றவற்றைச் சார்ந்திருக்குமாறு பஹ்ரைன் அரசு மாற்றத் துவங்கியது.
புதன்கிழமையன்று மனாமாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஷேய்க் மொஹம்மத் பேசுகையில் இரண்டாயிரம் சதுர கிமி அளவுள்ள கலீஜ் அல் பஹ்ரைன் வயலை ஆய்வுக்குட்படுத்தி மேம்படுத்த அயல்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை ஈர்க்க தேசிய எண்ணெய் மற்றும் வாயு ஆணையம் குறிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மேலும் இரண்டு வயலை துளையிடவும் மேற்கொண்டு எண்ணெய் வளத்தை மதிப்பிடவும் மேலும் நீண்ட கால உற்பத்தியை துவங்கவும் ஹால்லிபுர்டனுடன் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஷேய்க் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் தற்போது ஒருநாளைக்கு ஐம்பதாயிரம் பீப்பாய் அளவு எண்ணெயை பஹ்ரைன் வயலில் இருந்து உற்பத்தி செய்கிறது. இந்த வயல் 1932-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சவூதி அரேபியாவுடன் பஹ்ரைன் பகிர்ந்து கொண்டுள்ள அபு சாஃபா வயலில் இருந்தும் தினமும் 1.5 லட்சம் பீப்பாய் எண்ணெய் பஹ்ரைனுக்கு கிடைத்துவருகிறது.
பிற செய்திகள்
- காளை வளர்ப்பில் லாபமீட்டும் கிராமத்து பெண்ணின் வெற்றிக்கதை #BBCShe
- காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக அல்லாத கட்சிகள் நெருக்கடி தர வேண்டும்: வேல்முருகன்
- வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? போராட்டங்கள்தான் தீர்வா?
- யூடியூப் மீது சீற்றம் கொண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தினாரா சந்தேக நபர்?
- ‘காவிரி, ஸ்டெர்லைட்’ - போராட்ட களத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்