உலகப் பார்வை: ‘அமெரிக்கா - சீனா’ - வலுக்கும் வணிக போர்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images
வலுக்கும் வணிக போர்
25 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட இருக்கும் சுமார் 1,300 சீன பொருட்களின் பெயர்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. திட்டமிடப்பட்டிருக்கும் சீன பொருட்களுக்கான இந்த இறக்குமதி வரி உயர்வானது, சீனாவின் நியாயமற்ற அறிவுசார் சொத்துரிமை சட்டத்திற்கு எதிர்வினை என்கிறது வெள்ளை மாளிகை. பட்டியலிடப்பட்டுள்ள அந்த 1300 சீன பொருட்களில், மருத்துவ சாதனங்கள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களும் அடங்கும்.
முன்னதாக சீனா சில பொருட்களுக்கு வரி விதித்து இருந்தது. அது குறித்து விரிவாக படிக்க:

ராணுவத்தை அனுப்பிய டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா - மெக்சிகோ தென் எல்லையை பாதுக்காக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்ப இருப்பதாக சூளுரைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமையன்று பேசிய அவர், இந்த நடவடிக்கையை, `முக்கியமான நகர்வு` என்று வர்ணித்தார். இவருக்கு முந்தைய அதிபர்களும் தேசிய பாதுகாப்பு படையை அமெரிக்க எல்லையில் நிறுத்தி உள்ளனர். முன்னாள் அதிபர் ஒபாமா 1200 ராணுவத்தினரையும், ஜார்ஜ் புஷ் 6000 ராணுவத்தினரையும் நிறுத்தினர்.

ரஷ்ய தலையீடு

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக சந்தேகப்படும் விசாரணையில், முதன் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டச்சு வழக்கறிஞரான அவரது பெயர் அலெக்ஸ் வான். விசாரணை அதிகாரிகளிடம் பொய் சொன்ன குற்றத்திற்காக அவருக்கு 30 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஜெர்மன் கானின் மருமகன் தான் அலெக்ஸ்.

யூ-ட்யூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images
வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை காயமாக்கியதுடன் தன்னை தானே சுட்டுக் கொண்டார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.36 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் அவர் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் ஆண் நண்பர் என்று சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது. 32 வயது மற்றும் 27 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவர் சுடப்பட்டுள்ளனர்.உள்ளூர் நேரப்படி மதியம் 12.28 மணிக்கு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்ததாக சான் ப்ரூனோவின் தலைமை காவல் அதிகாரி ஈத் பார்பெரினி தெரிவித்தார்.
- விரிவாக படிக்க: யூ ட்யூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்

அகற்றப்பட்ட சுவஸ்திக் சின்னம்

பட மூலாதாரம், DPA
அனுமதியற்ற `தூய்மைப்படுத்துதல்'- ன் ஒரு பகுதியாக, வடக்கு ஜெர்மனியில் ஒரு தேவாலயத்தின் மணியில் இருந்த சுவஸ்திக் சின்னம் அகற்றப்பட்டுள்ளது. அனுமதியற்ற இந்த செயலை புரிந்தவர்கள், அந்த தேவாலயத்தில் ஒரு குறிப்பு சீட்டையும் விட்டு சென்றுள்ளனர். அதில், நாசி அரசாங்கத்தின் அசுத்தங்களை அகற்ற விரும்பினோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












