You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம்
அமெரிக்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுடுமண் வீரர் சிலை ஒன்றின் கட்டை விரலை உடைத்து, திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு "கடும் தண்டனை" வழங்க சீன அதிகாரிகள் கோரியுள்ளதாக சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 45 லட்சம் டாலர் மதிப்புடைய இந்த சிலை பிலடெல்ஃபியாவிலுள்ள ஃபிராங்கிளின் கல்வி நிலையத்தில் காட்சிக்கு வைப்பதற்காக கடனாக வழங்கப்பட்டுள்ள 10 சுடுமண் வீரர் சிலைகளில் ஒன்றாகும்.
இந்த சிலையின் கட்டை விரலை உடைத்து, திருடி சென்றதாகவும், முக்கியமான கலைப்பொருளை மறைத்து வைத்ததாகவும் கடந்த வாரம் மைக்கேல் ரேஹானா கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
"டெரகோட்டா ஆர்மி" எனப்படும் சுடுமண் வீரர்களின் சிலைகள், சீனாவின் மிகவும் முக்கியமான தொல்லியல் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
சுயப்படமும், திருட்டும்
டிசம்பர் 21ஆம் தேதி ஃபிராங்கிளின் நிலையத்தில் நடைபெற்ற கேலிக்குரிய கம்பிளி ஆடைகள் அணிந்து வருகின்ற "அக்ளி ஸ்வெட்டர் பார்ட்டி"யில் 24 வயதான ரேஹானா கலந்து கொண்டபோது, ஏற்கெனவே மூடப்பட்டிருந்த இந்த சுடுமண் வீரர்கள் சிலைகளின் காட்சி இடத்திற்கு சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய செல்பேசியை பயன்படுத்தி டார்ச் ஒளியை கொண்டு, இந்த சுடுமண் வீரர் சிலை ஒன்றின் முன்னால் அவர் சுயப்படம் எடுத்துள்ளார் என்று அமெரிக்க பெடரல் புலனாய்வு துறையை மேற்கோள்காட்டி சீன அரசு ஊடகமான சின்குவா தெரிவித்திருக்கிறது.
பின்னர் அவர் அந்த சிலையின் இடது கையில் தன்னுடைய கையை வைத்து அதிலிருந்து ஏதோ ஒன்றை உடைத்ததாக தோன்றுகிறது. அதனை தன்னுடைய பையில் போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு அவர் சென்றுவிட்டார்.
ஜனவரி 8ஆம் நாளன்று இந்த சுடுமண் வீரரின் கட்டை விரல் காணாமல் போயுள்ளதை அருங்காட்சியக ஊழியர் அறிய வந்துள்ளார்.
அமெரிக்க பெடரல் புலானாய்வு துறை அதனை ரேஹானாதான் செய்துள்ளதை பின்னர் கண்டறிந்துள்ளது. இதனை ஒப்புக்கொண்ட ரேஹானா, உடைத்த கட்டை விரலை டெஸ்கு டிராயரில் வைத்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சிலைகள் பள்ளி கவனமின்றி இருந்துள்ள ஃபிராங்கிளின் கல்வி நிலையத்திற்கு இந்த சுடுமண் வீரர் சிலைகளை கடனாக வழங்கிய சீன அரசு நடத்துகின்ற ஷான்சி கலாசார மரபுசார் வளர்ச்சி மையத்தின் இயக்குநர், திங்கள்கிழமையன்று கடும் கண்டனம் தெரிவித்திருத்திருப்பதாக சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் கூறியுள்ளது.
"இவ்வாறு அத்துமீறி நுழைத்து சிலையின் விரலை உடைத்தவரை அமெரிக்கா கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிராக நாங்கள் கடும் புகாரை தெரிவிக்கிறோம்" என்று வு ஹாய்யுன் தெரிவித்திருக்கிறார்.
இந்த சேதத்தை மதிப்பிடுவதற்கு 2 நிபுணர்களை இந்த மையம் அனுப்பப்போவதாகவும், மீட்கப்பட்டுள்ள கட்டை விரலை வைத்து இந்த சிலையை சரிசெய்ய போவதாகவும், இதற்கு இழப்பீடு கோரப்போவதாகவும் வு ஹாய்யுன் கூறியுள்ளார்.
"டெரகோட்டா ஆர்மி" என்று அழைக்கப்படும் ஆளுயர 8,0000 சுடுமண் படைவீரர்களின் சிலைகளில் 10 சிலைகள் ஃபிராங்கிளின் நிலையத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துவுக்கு முன் 210ஆம் ஆண்டு இறந்துபோன சின் ஷி ஹூவாங் என்கிற சீனப் பேரரசரால் இந்த சிலைகள் உருவாக்கப்பட்டன. தான் இறந்த பின்னர் இந்த சுடுமண் வீரர்கள் படை தன்னை பாதுகாக்கும் என்று இந்தப் பேரரசர் நம்பியிருந்தார்.
இந்த சுடுமண் வீரர் சிலைகள் சீனாவின் சியான் நகரத்தில் 1974ஆம் ஆண்டு சீன விவசாய குழுவினர் ஒன்றால் கண்டுபிடிக்கப்பட்டன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்