சீனா: குழந்தையின் சிகிச்சைக்காக தாய்ப்பாலை விற்கும் இளம்பெண்

தனது கைக் குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்துவதற்காக சீனாவிலுள்ள இளம்பெண் ஒருவர் தனது தாய்ப்பாலை விற்று வருகிறார்.

'மியாபாய்' என்னும் காணொளி பகிர்வு இணையதளத்தில் 'பார் வீடியோ' என்னும் காணொளி தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள காணொளியில், தாய்ப்பாலை விற்கும் பெண்மணியும், அவரது கணவரும் மிகவும் மோசமான நிலையிலுள்ள தங்களது குழந்தை ஒன்றின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்வதற்காக குறைந்தது ஒரு இலட்சம் யுவான்கள், அதாவது சுமார் 11,250 டாலர்களை திரட்ட வேண்டிய நிலையிலுள்ளதாக விவரிக்கின்றனர்.

இந்த காணொளியானது சீனாவின் பிரபல சமூக வலைதளமான 'சீனா விபோ'வில் பகிரப்பட்டதன் மூலம் 24 லட்சம் பார்வைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

சீனாவின் குவாங்டுங் மாகாணத்திலுள்ள சென்ஜென் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தங்களது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கான மருத்துவ கட்டணத்தை உடனடியாக திரட்டுவதற்காகவே தனது தாய்ப்பாலை விற்பதாக அந்த இளம்பெண் கூறுகிறார்.

இதுகுறித்து பேசிய அந்த இளம்பெண்ணின் கணவர், தாங்கள் ஏற்கனவே அந்த மருத்துமனைக்கு "பல்லாயிரக்கணக்கான யுவான்கள்" அளிக்க வேண்டியுள்ளதாகவும், "குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் குறைந்தபட்சம் ஒரு லட்சம் யுவான்களாவது அளிப்பதற்கு தயாராக இருக்குமாறு மருத்துவர்கள்" கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் மருத்துவ மையங்களின் எண்ணிக்கை அதிகமாகி வந்தாலும், உடனடியாக மருத்துவ சேவையை பெறுவதற்கு அதிகப்படியான பணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த காணொளிகளை இணையதளங்களில் காண்பவர்கள் பெரும்பாலும் தங்களது அனுதாபங்களை தெரிவித்தும், "பாலை விற்று, குழந்தையை காப்பற்றுங்கள்" என்பது போன்ற கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த இளம்பெண் பணம் திரட்டும் இடத்தினருகினில் இருப்பவர்கள் "அவர்களுக்கு பணம்கொடுங்கள்" என்று வலியுறுத்தியும், சிலர் "தாங்கள் அந்த பெற்றோர்களை நேரில் பார்த்தால் பணம் அளிப்போம்" என்று தெரிவித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

"சமூகத்தின் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்களுக்கு உடல்நிலை பாதிப்படைந்தால், அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பதில்லை" என்று பதிவிடப்பட்டுள்ள ஒரு கருத்துக்கு மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்கள் கிடைத்துள்ளது.

தாய்ப்பாலை விற்று நிதி திரட்டும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள சிலர், இதை "உதவி கேட்பதற்கான மோசமான வழி" என்று விமர்சித்துள்ளனர்.

"எல்லோருக்கும் உங்களுக்கு உதவுவதற்கு யாருமில்லை என்றும், நிதியை எதிர்நோக்கி நீங்கள் இருப்பது குறித்தும் தெரியும். ஆனால், அதற்காக நீங்கள் தாய்ப்பாலை விற்றால் உங்களது கண்ணியத்தை எப்படி காப்பீர்கள்" என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :