ஆப்கானிஸ்தான்: துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி

பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 'இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில்' நான்கு துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ஆஃப்கானியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆப்கன் பாதுகாப்பு படையினர் அவர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு துப்பாக்கிதாரிகளில், மூன்று பேரை பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளனர் என்றும், எஞ்சிய ஒருவரை பிடிக்க முயன்று வருகின்றனர் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இத்தாக்குதலில் குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை ஹோட்டலின் உள்ளே புகுந்த துப்பாக்கிதாரிகள், அங்கு தங்கியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் எறி குண்டுகளையும் வெடிக்க வைத்தனர்.

பட மூலாதாரம், EPA
உள்ளூர் நேரப்படி 21:00 மணிக்குத் தாக்குதல் தொடங்கியுள்ளது. ஹோட்டலில் இருந்த பாதுகாப்பு காவலர்களைச் சுட்டுவிட்டு, ஐந்து மாடி கட்டடத்திற்குள் துப்பாக்கிதாரிகள் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்தபோது, மாகாண அதிகாரிகள் கலந்துகொண்ட ஐ.டி மாநாடு நடந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. துப்பாக்கிதாரிகள், சிலரைப் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
காபூலில் உள்ள ஹோட்டல்கள் குறித்து அமெரிக்க தூதரகம் ஒரு எச்சரிக்கையை விடுத்த சில நாட்களில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
''காபூலில் உள்ள ஹோட்டல்களில் தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவது குறித்து வரும் தகவல்கள் எங்களுக்குத் தெரியும்'' என அமெரிக்க தூதரகம் கூறியிருந்தது.
மக்கள் தங்களது அறைகளில் ஒளிந்து இருப்பதாக ஒரு விருந்தினர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த ஹோட்டல் 2011-ம் ஆண்டு தாலிபான்களால் தாக்கப்பட்டது. அப்போது ஒன்பது தாலிபான்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












