90 சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் இல்லையா?

தொன்னூறு சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. அது உண்மையா?

எலிஜா ஸ்டெம்முக்கு அவரது தோழி மார்கோவிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசு வந்திருந்தது.

அந்த பரிசை திறந்து பார்த்தவுடன் அவர் சிறிது குழம்பிப் போனார். அது சிவப்பு நிறத்தில் இருந்தது. புத்தகத்துடன் சிறிய அளவில் இருந்தது. அது தோலால் செய்யப்பட்டு இருந்தது.

பிறகுதான் அவருக்கு புரிந்தது, அது பாஸ்போர்ட்டுக்கான உறை என்று.

ஃபிலடெல்ஃபியாவில் வசிக்கும் 21 வயதான எலிஜா, அமெரிக்காவை விட்டு எங்குமே வெளியே சென்றதில்லை. அவருக்கு வரும் மார்ச்சில் நயகரா நீர் வீழ்ச்சிக்கு செல்ல ஒரு பரிசு கிடைத்தது.

இது குறித்து அவர் சொல்கிறார், "நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது"

பாஸ்போர்ட் நம்பிக்கை

பத்து சதவிகித அமெரிக்கர்களிடம் மட்டும்தான் பாஸ்போர்ட் இருக்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இணையத்திலும் இது தொடர்பான தகவல்களை நீங்கள் அதிகம் பார்க்கலாம்.

இந்த தகவல் 1994-ல் உண்மையாக இருந்தாலும், இப்போது 40 சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி கண்டும் வருகிறது. பலர் இப்போது பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். இதில் எலிஜாவும் ஒருவர்.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா துறை பேராசிரியராக இருக்கும் லிசா டெல்பி பாஸ்போர்ட் எடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளது என்கிறார்.

இறுக்கமான சட்டங்கள்

முதல் காரணம், 9/11 இரட்டை கோபுர தாக்குதல். இந்த தாக்குதலுக்குப் பின் சட்டங்கள் நிறைய மாறின.

இந்த தாக்குதலுக்கு முன்பு, அமெரிக்கர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் கனடா, மெக்ஸிகோ, மற்றும் தங்களது பிற அண்டை நாடுகளுக்கு செல்ல முடியும். ஆனால், அதன்பின் சட்டங்கள் இறுக்கமாகின. இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் தேவைப்பட்டது.

இதற்குப் பின், மூன்று ஆண்டுகளில், பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 20 மில்லியன் என்ற அளவில் உயர்ந்தது.

பயணச்சீட்டு கட்டணம்

இரண்டாவது காரணம், வளரும் பொருளாதாரமும், குறைந்து வரும் எண்ணெய் விலையும்தான். இதன் காரணமாக விமான பயணச்சீட்டு கட்டணம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது.

நான், இங்கிலாந்துக்கு செல்ல 90 டாலர் மட்டும்தான் என்ற விளம்பரத்தை பார்த்தேன். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? என்கிறார் பேராசிரியர் லிசா டெல்பி.

தேடல்

மூன்றாவது காரணம், புது அனுபவ தேடலுக்கான ஊந்துதல். "நவயுக இளைஞர்கள் தங்களது பணத்தை பொருட்கள் வாங்குவதற்கு செலவிடுவதைவிட, புதிய அனுபவ தேடலுக்காகதான் செலவிடுகிறார்கள்." என்று லிசா சொல்கிறார்.

மேலும் அவர், "மகிழுந்து வாங்குவதில் அவர்கள் மகிழ்ச்சி காண்பதைவிட, புதிய நினைவுகளை உண்டாக்குவதில்தான் மகிழ்ச்சிகாண்கிறார்கள். அதற்காகதான் செலவிடவும் விரும்புகிறார்கள்."

பயணக் காதல்

இந்த காரணங்கள் உண்மைதான் என்கிறார் புதிதாக பாஸ்போர்ட் எடுத்துள்ள எலிஜாவும்.

எலிஜா, அவரது தோழி அனுப்பிய பரிசுப் பொருளை பிரித்தபோது, அதில், "உனக்கு பொருட்களைவிட, புதிய அனுபவங்கள்தான் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும்" என்று குறிப்படப்பட்டு இருந்தது.

இதனை, மேரிலாண்டை சேர்ந்த 20 வயதான ஏசியா ஜோன்ஸும் வழிமொழிகிறார்.

ஏசியாவுக்கு எழுத்தாளர் ஆக வேண்டுமென்பது கனவு. ஆனால், அவர் இளைஞர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நலனுக்காக வேலை பார்க்கிறார். அவர் அழகு குறிப்பு மற்றும் சுற்றுலா சம்பந்தமாக பிளாக் ஒன்றும் எழுதுகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை பெற்றார். அடுத்த மாதம் மெக்சிகோ அல்லது பெலிஸி செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு தனது பாஸ்போர்ட் பயன்படும் என்று நம்புகிறார்.

சமூக ஊடகங்களின் வளர்ச்சிதான் பயணங்கள் மீதான காதலை பரவலாக்கி உள்ளது என்கிறார் அவர்.

பிரிட்டனை விட குறைவு

அமெரிக்காவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், 42 சதவிகிதம் என்பது மிகவும் குறைவுதான். பிரிட்டனில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.

பிரிட்டனில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப் படி 76 சதவிகித இங்கிலாந்து மக்களிடம் பாஸ்போர்ட் உள்ளது.

ஆனால் அதே நேரம், பாஸ்போர்ட் இல்லாத அமெரிக்கர், பாஸ்போர்ட் இல்லாத பிரித்தானியரைவிட அதிக தூரம் பயணிக்கிறார்.

இருப்பத்தி இரண்டு வயதான, மேரிலாண்டை சேர்ந்த மோர்கன் இந்த மாதம்தான் தனது பாஸ்போர்ட்டை பெற்றார். ஆனால் அதற்கு முன்பே, அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து இருக்கிறார். அலாஸ்கா, ஹவாய், வெர்ஜின் தீவுகள் - இவையெல்லாம் அவர் பயணம் செய்த பகுதிகள்.

அவர் உள்நாட்டுக்குள் அதிகம் பயணம் செய்திருந்தாலும், அவர் பாஸ்போர்ட் வேண்டும் என்று நினைத்ததற்குபின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது. அது அரசியல் காரணமும் கூட.

"இந்த மனிதர் (டிரம்ப்) தொடர்ந்து தன்னிடம் உள்ள அணு ஆயுத பொத்தான் குறித்து கிம்முக்கு எதிராக ட்வீட் செய்துக் கொண்டிருந்தார் என்றால், எனக்கு இங்கிருந்து வெளியே செல்வதற்கு ஒரு வழி வேண்டும். அதற்காகதான் பாஸ்போர்ட் எடுத்து வைத்துள்ளேன்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :